Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

இந்தி ஆட்சி மொழியானால்
புலவர் குழந்தை




1.  இந்தி ஆட்சி மொழியானால்
    1.  மின்னூல் உரிமம்
    2.  மூலநூற்குறிப்பு
    3.  பதிப்புரை
    4.  புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு
    5.  மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை
2.  முன்னுரை
3.  இந்தி எதிர்ப்பு
4.  தேசீயமொழிகள்
5.  ஆட்சிமொழித்திட்டம்
6.  ஆட்சிமொழிச் சட்டத் திருத்தம்
    1.  கணியம் அறக்கட்டளை


இந்தி ஆட்சி மொழியானால்

 

புலவர் குழந்தை

 

 

மூலநூற்குறிப்பு

  நூற்பெயர் : இந்தி ஆட்சி மொழியானால்

  தொகுப்பு : புலவர் குழந்தை படைப்புகள் - 9

  ஆசிரியர் : புலவர் குழந்தை

  பதிப்பாளர் : இ. இனியன்

  முதல் பதிப்பு : 2008

  தாள் : 16 கி வெள்ளைத் தாள்

  அளவு : 1/8 தெம்மி

  எழுத்து : 11 புள்ளி

  பக்கம் : 16+ 392 = 408

  நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)

  விலை : உருபா. 255/-

  படிகள் : 1000

  நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.

  அட்டை வடிவமைப்பு : வ. மலர்

  அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா, ஆப்செட் பிரிண்டர்ஸ், இராயப்பேட்டை, சென்னை - 14.

  வெளியீடு : வளவன் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017., தொ.பே. 2433 9030


பதிப்புரை

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டவர். திராவிட இயக்கச் சான்றோர்கள் வரிசையில் முன்னவர். 1906இல் தோன்றி 1973இல் மறைந்தார். 68 ஆண்டுகள் தமிழ் மண்ணில் வாழ்ந்தவர். பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களால் பாராட்டப்பட்டவர்.

தமிழர்கள் ஆரிய சூழ்ச்சியால் பட்ட அவலங்களை எண்ணியெண்ணி நெஞ்சம் குமுறியவர். தம் நெஞ்சத்து உணர்வுகளை எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்திற்கு பதிவுகளாக எழுதி வைத்துச் சென்றவர். தமிழ் இன எழுச்சி வரலாற்றில் அளப்பரும் தொண்டாற்றியவர். இவர் எழுதிய நூல்கள் 29. இந்நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து, பொருள் வழிப் பிரித்து, கால வரிசைப்படுத்தி 1 முதல் 15 படைப்புகளாக ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். பல்வேறு அணிகலன்கள் அடங்கிய முத்து மாலையாகத் தந்துள்ளோம். இவர் நூல்கள் அனைத்தும் தமிழ்மொழி இன நாட்டின் மேன்மைக்கும், வாழ்வுக்கும், வளத்துக்கும் வித்திடுபவை.

குறிப்பாக இராவண காவியம் படைப்பு திராவிட இயக்க வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல். ஆரிய எதிர்ப்பு உணர்வைக் கட்டியமைத்த இன எழுச்சிக் காவியம். தமிழ் மண்ணில் தன்மானக் கொள்கைகள் நிலைத்து நிற்பதற்கு செயற்கரிய செயல்களைத் தமிழ் இளைஞர்கள் செய்வதற்கு முன் வரவேண்டும் எனும் இன உணர்வோடு எழுதிய படைப்புகள் அனைத்தையும் ஒரே வீச்சில் வெளியிடு கின்றோம். இப்படைப்புகள் வெளிவரப் பல்லாற்றானும் துணை நின்ற தமிழ்ப் பெருமக்களுக்கும், இந்நூல்களுக்கு அறிமுகவுரை தந்துதவிய பெரும்புலவர் இரா. வடிவேலன் அவர்களுக்கும், எம் பதிப்பக ஊழியர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பயன் கொள்ளும் வகையில் பிழையற்ற பதிப்பக வெளிவருகின்றது. வாங்கிப் பயனடையுங்கள்.

(இராவண காவியம் நூலுக்கு மிகச்சிறந்த தெளிவுரை எழுதப்பட்டு வருவதால் இப்படைப்பு வரிசையில் சேர்க்க முடியவில்லை. விரைவில் வெளிவரும்.)

கோ. இளவழகன்


புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு

இராவண காவியம் படைத்த புலவர் குழந்தை அவர்கள் கொங்கு நாட்டில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ‘ஓலவலசு’ என்னும் சிற்றூரில், பண்ணையக்காரர் என்னும் பழங்குடியில், முத்துசாமிக் கவுண்டர் - சின்னம்மையாருக்கு 1-7-1906இல் பிறந்தார். இவர்தம் பெற்றோருக்கு ஒரே மகனாக வளர்ந்தார்.

தாம் பிறந்த சிற்றூரில் திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார்; தொடர்ந்து படிக்காமல் இடையிடையே விட்டு விட்டுப் படித்தார். மொத்தத்தில் எட்டு மாதங்களே திண்ணைப் பள்ளியில் பயின்றார். கருவிலே திருவுடையவராகிய இவர் பத்தாம் ஆண்டில் இளம் பருவத்திலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றிருந்தார். யாரேனும் ஒருவர் ஒரு பாட்டைப் பாடக் கேட்டால் உடனே இவர் அப்பாட்டின் ஓசையில் புதுப்பாட்டு ஒன்றினைப் பாடுவார். எப்போதும் ஏதேனும் ஒருபாட்டை எழுதிக் கொண்டே இருப்பார். பாட்டு எழுதுவது இவருக்குக் கைவந்த கலையாக அமைந்து விட்டது.

இவர் காலத்தில் இவர் வாழ்ந்த பகுதியில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை. ஆகவே தானாகவே முயன்று படித்துக் கவிபாடும் திறம் பெற்றிருந்தார். இவர் முதன் முதலில் இசைப்பாடல்களைப் பாடினார். இவர்தம் கல்லாமல் பாடும் கவித்திறனையும், பாடல்களின் சிறப்பினையும் கண்டு வியந்த அறிஞர்கள் சிலர், தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படிக்குமாறு தூண்டினர்; ஊக்குவித்தனர். தாம் பிறந்த ஓலவலசிலோ, அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலோ தமிழ்ப் புலவர்கள் எவரும் அக்காலத்தில் இல்லை. ஆகவே இவர் ஆசிரியர் துணையின்றித் தாமாகவே முயன்று இலக்கிய இலக்கணங்களைப் படித்துத் தமிழில் சிறந்த புலமை பெற்றார். மேலும் இவர் ஆசிரியர் உதவியின்றித் தாமாகவே படித்து 1934ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தனித் தேர்வராகத் தேர்வு எழுதிப் புலவர் பட்டயம் பெற்றார்.

இவர் பவானியில் மாவட்டக் கழகப் பள்ளியில் 1924ஆம் ஆண்டில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். 1940வரை தமிழாசிரியராகத் தொண்டாற்றினார். 1941 முதல் 1962ஆம் ஆண்டுவரை தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மாணவர்கள் வியந்து பாராட்டும்வகையில் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஆசிரியர் பணியினின்று ஓய்வு பெற்ற பின்பும் எழுத்துப் பணியினின்று ஓய்வு பெறவில்லை. வாழ்நாள் முழுமையும் தமிழுக்காகத் தொண்டாற்றினார்; பல நூல்களைப் படைத்தார்; தமது கவிதைகள் வாயிலாகச் சமுதாய உணர்வை - பகுத்தறிவை மக்களிடையே பரப்பினார்.

இவருக்கு முன் ஓலவலசில் படித்தவர் எவருமில்லை. அவ்வூரில் உள்ளவர் களுக்குக் கையொப்பம் இடவும் தெரியாது. இளமைப் பருவத்திலேயே பொதுத் தொண்டில் -குமுகாயத் தொண்டில் ஆர்வமுடையவராக இருந்தார். தாமாகத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தம் ஊரிலிருந்த தம்மையொத்த அகவையுடைய இளைஞர்களுக்குக் கல்வி கற்பித்தார். அவர்கள் மூலமாகப் பெரியவர்களுக்குக் கையொப்பம் போடப் பயிற்சியளிக்கச் செய்தார்; கை நாட்டு போடுவதை அறவே ஒழித்தார். அக்காலத்தில் இவரைவிட மூத்தவர் பலர் இவரிடம் கல்வி கற்றனர். ஓலவலசில் கல்லாமை இருளைப் போக்கினார்.

வேளாளஇன மக்களிடையே இருந்த பலபிரிவினரையும் ஒன்று சேர்ப்பதற் காகவும், அவ்வின இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்காகவும் 1946 முதல் 1950வரை ‘வேளாளன்’ என்னும் திங்களிதழை நடத்தினார். அவ்விதழில் இவர் எழுதிய கட்டுரைகள் அவ்வின இளைஞர்களிடையே புத்துணர்ச்சியை வளர்த்தது. விதவை மணம், கலப்புத் திருமணம், சீர்த்திருத்த மணம் முதலியன செய்யவும் அம்மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார்.

வேளாள சமூகத் தலைவரான திரு. வி.சி. வெள்ளியங்கிரி கவுண்டர் தலைமையில், தகடூர் (தருமபுரி) மாவட்டத்திலுள்ள அரூரில் வேளாள மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் புலவர் குழந்தை அவர்கள் ‘விதவை மணம்’ தீர்மானங் கொண்டு வந்தார்; ஒருமனமாக நிறைவேறச் செய்தார். அதன்படி நூற்றுக்கணக்கான விதவை மணங்களைச் செய்து வைத்தார். இச்செயல்கள் இவர்தம் சமூகத் தொண்டிற்குச் சிறந்த சான்றுகளாகும்.

இவர், யாப்பிலக்கணம் படிப்பதற்கு முன்னே 1918இல் ‘கன்னியம்மன் சிந்து’ என்னும் கவிதை நூலை வெளியிட்டார். இவர் பாடிய அச்சாகாத பாடல்களும் நூல்களும் பல உள்ளன; சில நூல்கள் அச்சாகி வெளியிடப்பட்டன. யாப்பிலக்கணம் கற்பதற்கு முன்பு பாடிய பாடல்கள் யாப்பிலக்கணப்படி அமைந்துள்ளன.

இவர் இதுவரை எழுதியுள்ள நூல்கள் : இராவண காவியம் உள்படச் செய்யுள் நூல்கள்-7, உரைநூல்கள் - 3, இலக்கண நூல்கள் -3, உரைநடை நூல்கள் -16 ஆகமொத்தம் 29 நூல்கள் படைத்துள்ளார். தீரன் சின்னமலை நாடகம் இன்னும் அச்சாகவில்லை.

‘விருத்தம் என்னும் வெண்பாவிற்கு உயர்கம்பன்’ என இதுவரையில் போற்றப்பட்டு வரும் புகழுரைக்கு ஈடாகப் புலவர் குழந்தை அவர்கள் இராவண காவியம் பாடிப் புகழ்பெற்றார். ‘காமஞ்சரி’ என்னும் செய்யுள் நாடக நூல், பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்களின் மனோன்மணீயம் என்னும் நூலுக்குப் பிறகு எழுதப்பட்ட சிறந்த நாடக நூலாகும். ‘நெருஞ்சிப் பழம்’ என்னும் நூல் தமிழில் இதுவரை வெளிவராத கற்பனைக் கருவூலமான காதல் கதையாகும்.

புலவர் குழந்தை அவர்கள் பெருங்கவிஞர் மட்டுமல்லர். சிறந்த எழுத்தாளர்; கேட்போர் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் பேசும் பெரும் பேச்சாளர். இவருடைய எழுத்துகள் உறுதியும் அஞ்சாமையும் ஆய்வும் செறிந்த புரட்சிக் கனல் தெறிக்கும் இயல்புடையவை. இவருடைய செய்யுள் நடையும் உரைநடையும் எளிய இனிய தனித்தமிழில் அமைந்தவை. இவர் படைத்த நூல்களெல்லாம் தமிழுக்கும் தமிழர்க்கும் ஆக்கம் தரும் வகையில் அமைந்துள்ளன.

தந்தை பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இவர் அவ்வியக்கத்தில் சேர்ந்தார்; பெரியாரின் அணுக்கத் தொண்டரானார். அன்று முதல் சுயமரியாதை இயக்கம் அதன் மறு பதிப்பான திராவிடர் கழகம், அதன் மறுமலர்ச்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுள் இணைந்து தொண்டாற்றியவர். பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதனையும் செய்யாதவர். பள்ளித் தமிழாசிரியராக இருந்துகொண்டே, அத்தொழிலுக்குச் சிறிதும் இடையூறு இல்லாமல், ‘பெரியார் சீடர்’, ‘கருப்புச் சட்டைக்காரர்’ என்று பொது மக்கள் கூறும்படி கட்சித் தொண்டாற்றியவர். இவரது சுயமரியாதை உணர்ச்சிப் பிழம்பே இராவண காவியம் படைக்கத் தூண்டியது; இவருக்குப் புகழைச் சேர்த்தது.

1948இல் சென்னையில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் திருக்குறளுக்குப் பகுத்தறிவிற்கு ஏற்ப உரை எழுதுவதற்குத் தந்தை பெரியார், நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் ஐவர் கொண்ட குழுவை அமைத்தார். அக்குழுவில் புலவர் குழந்தையும் ஒருவர். இவரே தனிஒருவராக இருந்து திருக்குறளுக்கு உரை எழுதி ‘திருக்குறள்-குழந்தையுரை’ என்று வெளியிட்டார். அவ்வுரையை 28 நாட்களில் எழுதி முடித்த பெருமைக்குரியர்.

அறிஞர் அண்ணா அவர்கள் ஈரோட்டில் ‘விடுதலை’ ஆசிரியராக இருந்தபோது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார். காங்கிரசு ஆட்சிக்காலத்தில் தடை செய்யப்பட்ட இவர்தம் இராவண காவியத்திந்ழு, தமிழக அரசால், தமிழ் வாழத் தாம் வாழும் தமிழவேள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் 17-5-1971இல் தடை நீக்கப்பட்டது. அதைக்கண்டு தமிழகமே அகமிக மகிழ்ந்தது; தமிழவேள் கலைஞரை உளமார வாழ்த்தியது.

புலவர் குழந்தை ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கொண்டவர். இவர் ஒரு புரட்சிப் புலவரே எனினும் அமைதியும் அடக்கமும் உடையவர்; ஆடம்பரமின்றி எளிய வாழ்வு வாழ்ந்தவர்; பழகுவதற்கு இனிய பண்பாளர்; கடமை தவறாதவர்; எதிர்க் கட்சியானாலும், மாற்றுக் கருத்து உடையவராலும் நன்கு மதிக்கத் தக்கவர்.

புலவர் குழந்தை அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் முத்தம்மையார். கல்வியறிவு பெற வாய்ப்பில்லாதவராயினும் பொது அறிவு நிரம்பப் பெற்றவர்; தன்மானக் கொள்கையுடையவர்; தம் கணவரின் கொள்கைக்கேற்ப இல்லறத்தை இனிது நடத்தியவர். இவ்விணையருக்குச் சமத்துவம், சமரசம் என்னும் இரு பெண்மக்கள் உள்ளனர். தமிழுக்குத் தொண்டு செய்து வந்த புலவர் பெருந்தகை தமது 68ஆம் அகவையில் 24-9-1973இல் இயற்கை அடைந்தார். மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் புலவர் குழந்தையிடம் அன்பும் மதிப்பும் உடையவர். அவர் மறைந்த பிறகு, அவர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய நூல்கள் 8-7-2006 அன்று அரசுடைமை ஆக்கப்பட்டதாக அறிவித்தார். குழந்தை அவர்களின் மகள்கள் இருவருக்கும் தலா ரூ.5 இலட்சம் பரிவுத் தொகை வழங்கினார்.

  நன்றி : நித்திலக் குவியல் (திபி 2037 - டிசம்பர் 2006)


மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை

பெரும் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாளன்று தேனினும் இனிய ஆற்றினை நம் காதில் பொழியச் செய்தது மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு.

புலவர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட 29 நூல்களையும் அரசுடைமை யாக்கிப் பரிவுத் தொகையாக ரூபாய் 10 இலட்சத்தையும் அளித்துள்ளது.

பணம் என்பது ஒரு பொருட்டன்று; அதே நேரத்தில் பெரும் புலவரின் நூல்களை அரசுடைமை ஆக்கியதன் மூலம் அவருக்குச் சிறப்பானதோர் அங்கீகாரத்தை அளித்துள்ளது - அதுதான் குறிப்பிடத்தக்கது.

தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப் பட்டவர்; தன்மான இயக்கத்தில் தன்னை ஒப்படைத்தவர் - திராவிடர் கழகத்தில் கருஞ்சட்டை வீரராக வீர உலா வந்தவர்.

அவர் இயற்றிய “இராவண காவியம்” - இனவரலாற்றில் - இயக்க வரலாற்றில் ஈடு இணையில்லாதது.

4.9.1971 அன்று விழுப்புரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களுக்கு நடத்தப்பட்ட விழாவில் தந்தை பெரியார் பங்கு கொண்டு புலவர் குழந்தை அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டுரையும் புகன்றார்.

அவ்விழாவில் பகுத்தறிவாளர் கழக மாநிலப் புரவலர் என்கிற முறையில் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும் பங்கேற்றுப் பாராட்டுரை புகன்றார்.

அவ்விழாவில் பங்கேற்றுப் புலவர் குழந்தை அவர்கள் ‘இராவண காவியம் எழுதியது ஏன்?” என்பது குறித்துத் தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

“இராமன் கடவுளல்ல என்கின்ற உணர்ச்சியினைத் தமிழக மக்களிடையே ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக இராவண காவியத்தை எழுதினேன். எனக்குத் துணிவினைத் தந்தவர் தந்தை பெரியாரவர்களே ஆவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் (‘விடுதலை’ 29.9.1971 பக்கம் 3).

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆனாலும், புலவர் குழந்தை யானாலும் தொடக்கத்தில் பக்திப் பாட்டெழுதிக் கிடந்தவர்கள்தாம். தந்தை பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பின்பே பகுத்தறிவுக் கருவை கவிதையின் மையமாக வைத்துப் பாட்டெழுதினார்கள் என்பது அடிக்கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.

விழுப்புரம் பாராட்டு விழாவில் தந்தை பெரியார் கூறினார்.

“புலவர் குழந்தையவர்கள் இராவண காவியம் எழுதி இருக்கின்றார், அது ஒரு இராமாயணம் போன்றதே! எத்தனையோ இராமாயணங்கள் இருக்கின்றன என்றாலும் நம் நாட்டிலிருப்பது பார்ப்பன இராமாயணமாகும். இந்த இராமாயணத்தின் தத்துவம் நம்மை இழிவுபடுத்துவதேயாகும். நம்மை அடக்கி ஒடுக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை வாய்த்தவரை செய்ய வேண்டியது; பார்ப்பான் தர்மத்தை நிலை நிறுத்த தன் மனைவியை விட்டுக் கொடுத்து, அதன் மூலம் அவனை ஒழிக்கலாம் என்பதை உணர்த்துவதற்காக எழுதப்பட்டதேயாகும்.

நமது புலவர்கள் மகா மோசமானவர்கள்; பார்ப்பான் எழுதியதைக் கண்டிக்காது, காது, மூக்கு வைத்துப் பெருமைப்படுகிறார்களே தவிர, அதனைக் கண்டித்து எழுதப் புலவர் குழந்தைபோல் எவரும் முன்வரவில்லை. முதன்முதல் நண்பர் பாரதிதாசன் அவர்கள்தான் துணிந்து பார்ப்பானைக் கண்டித்தார்.

புலவர் குழந்தை அவர்கள் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனங்களையெல்லாம் காவிய நடையில் எழுதியுள்ளார். அதுவும் இலக்கணப்படி எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தை நீங்களெல்லாம் வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டும். பார்ப்பான் தன் இனத்திற்காக பிரச்சாரம் செய்கின்ற காலிகளையெல்லாம் சாமியாக்குகின்றான். அதுபோல நமக்காகப் பாடுபடுகின்றவர்களை, தொண்டு செய்கிறவர்களை, எழுதுகிறவர்களைப் பெருமைப் படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் துணிந்து முன்வருவார்கள்” (விடுதலை 29.9.1971 பக்கம் 3) என்று தந்தை பெரியார் பாராட்டுதலுடன் ஆழமான கருத்தினை எடுத் துரைத்தார்கள்.

சேலம் பேரணியில் முன்வரிசையில் புலவர் குழந்தை

1971 (சனவரி 21) அன்று திராவிடர் கழகம் நடத்திய சேலம் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் கருப்புடை அணிந்து புலவர் குழந்தை அவர்கள் வீறுநடைபோட்ட காட்சி கண் கொள்ளாதது.

1938, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவரும் கூட!

எந்த இடத்திலும் தாம் ஏற்றுக் கொண்ட தன்மான இயக்க பகுத்தறிவுக் கருத்துக்களைக் கம்பீரமாகச் சொல்லத் தயங்காதவர்.

வெள்ளக்கோயில் தீத்தாம்பாளையத்தில் 1930இல், “ஞானசூரியன்” நூல் ஆசிரியரான சாமி சிவானந்த சரஸ்வதியுடன் ‘கடவுள் இல்லை’ என நான்கு நாள் நடத்திய சொற்போரில் புலவர் குழந்தை அவர்கள் வெற்றி பெற்றார் என்பதிலிருந்து, அவரின் விவாதத்திறன் பளிச்சிடுகிறது.

இரா. பி. சேதுப்பிள்ளையின் பாராட்டு!

கம்பன் கவிநயத்தை லயித்து, சப்புக் கொட்டிப் பேசும் சொல்லின் செல்வர் என்று போற்றப்பட்ட இரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள்கூட புலவர் குழந்தையின் இராவண காவியத்தில் சொக்கிப் போயிருக்கிறார்.

“தேனினும் இனிய செந்தமிழ்க் குழந்தை!”

நான் கம்பராமாயணக் கவிச் சுவையில் கட்டுண்டு கிடந்தனன். தங்கள் இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது. கருத்து மாறுபாடு வேறு” என்று குறிப்பிட்டதிலிருந்து புலவர் அவர்களின் புலமைத் திறன் குன்றின் மேல் ஒளிர்கிறது.

கம்ப இராமாயண அன்பரான புலவர் அய்யன் பெருமாள்கோனார் ஒருபடி மேலே தாவிப் பாடினார்.

“ இனியொரு கம்பனும் வருவானோ?
இப்படி யும்கவி தருவானோ?
கம்பனே வந்தான்;
அப்படிக் கவிதையும் தந்தான்
ஆனால்,
கருத்துதான் மாறுபட்டது”

என்று கவியால் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார்.

இத்தகைய தமிழ்ப் புலவர் பெருமகனாருக்குத்தான் தமிழக அரசு உரிய சிறப்பினைச் செய்திருக்கிறது.

கம்பனைப் போல் காட்டிக் கொடுத்து காவியம் புனைந்திருந்தால் இவருக்கு இமயப்புகழ் கிடைத்திருக்கும். என்றாலும் காலங் கடந்தாவது ஒரு அரசின் அங்கீகாரம் கிடைத்தது என்பது வரவேற்கத் தகுந்ததாகும்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், அதன் துணை அமைப்பான பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மூலம், மறைக்கப்படும் தமிழினப் பெரு மக்களைத் (இலக்கியவாதிகளை) தம் தோளில் தூக்கிக் கொண்டாடத் தவறவில்லை.

தமிழ்நாட்டிலேயே இராவண காவியத் தொடர் சொற்பொழிவை அரங்கேற்றிய பெருமை அதற்குண்டு. சிலம்பொலி செல்லப்பனார் அவர்களைக் கொண்டு 29.9.1978-ல் தொடங்கி 7.12.1979வரை 21 சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. அதே போல் பேராசிரியர் அறிவரசன் அவர்கள் 29.9.1998 முதல் 13.11.1999வரை 15 சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

முனைவர் மறைமலை இலக்குவனார் 1.7.2004 முதல் 15.6.2006 வரை 23 தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

இராவண காவிய மாநாடு

இரண்டு இராவண காவிய மாநாடுகள் நடத்தப்பட்டன; முதல் மாநாடு 5.7.1986 அன்று காலை முதல் இரவுவரை சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இரண்டாவது இராவண காவிய மாநாடு 1.7.1989 அன்று (புலவர் குழந்தை அவர்களின் 83-ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று) சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது.

இவையன்றி, தனித்தனிச் சிறப்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டதுண்டு. இத்திசை யில் மொத்தம் 77 நிகழ்ச்சிகள் நடத்திய சாதனை பெரியார் நூலக வாசகர் வட்டத்துக்கு உண்டு.

தீர்மானங்கள்

28.6.2005 அன்று சென்னை பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விழாவில் நிறைவுரையாற்றினார். அவ்விழாவில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானம் தமிழக அரசு புலவர் குழந்தையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்பதாகும்.

இரண்டாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களின் நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்பதாகும்.

மூன்றாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களைப் போற்றும் வண்ணம் அவர்தம் அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்பதாகும்.

இந்தத் தீர்மானங்களை இணைத்து, அவற்றைச் செயல்

படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து அன்றைய தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் கடிதம் ஒன்றை எழுதினார். (15.7.2005)

அந்தக் கடிதம் இன்னும் கோப்பில் குறட்டை விட்டுக் கொண்டுதானிருக்கிறது. காரணம் அந்த அரசுக்குத் தமிழ் உணர்வு இல்லாததுதான்.

மத்திய அரசு தொலை தொடர்பு மற்றும் தொழிற் நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு தயாநிதிமாறனுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் கி. சத்தியநாராயணன் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதினார். புலவர் குழந்தை அவர்களை நினைவுகூரும் வகையில் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது. (12.8.2005).

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் 24.8.2005 அன்று ஒரு கடிதம் எழுதினார். வாசகர் வட்டம் நிறைவேற்றிய தீர்மானங்களை இணைத்து அவற்றைச் செயலாக்கம் செய்ய அதில் வேண்டுகோள் விடப்பட்டு இருந்தது.

கலைஞரின் சாதனை!

இப்படி இடை விடாத தொடர் முயற்சிகளைக் கழகம் மேற்கொண்டதற்கு தி.மு.க. ஆட்சியில், மாண்புமிகு மானமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக முதல் அமைச்சர் ஆகியுள்ள நிலையில் வெற்றி கிடைத்திருக்கிறது.

இந்த அரும்செயலைச் செய்த முதல் அமைச்சரைப் பாராட்டி, தமிழக அரசைப் பாராட்டி, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற புலவர் குழந்தை நூற்றாண்டு நிறைவு விழாவில் (29.6.2006) நன்றியைத் தெரிவித்துப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அஞ்சல்தலை வெளியிடுவது மட்டும் நிலுவையில் உள்ளது. அதனையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றுவார் என்பதில் அய்யமில்லை. புலவர் குழந்தை அவர்கள் மறைந்தாலும் காலத்தை வென்று நம்மிடையே வாழ்கிறார்.

வாழ்க அப்பெருமகனார்!

முன்னுரை


நாட்டின் பல பக்கங்களிலும் இன்று பகையிருள் சூழ்ந்துள்ளது. செஞ்சீனப்புலி நம் நாட்டின் மீது பாயத்தயாராகி வருகிறது. அது இந்தியாவை விழுங்க ஏற்ற காலம் பார்த்துக்கொண்டிருக்கிறது. அதற்காக இங்கு அது ஐந்தாம் படைகளை ஆக்கிக் கொண்டு வருகிறது. சீனரை எதிர்த்து விரட்ட இன்னும் நாம் வெளியார் உதவியை வேண்டிய நிலையில் இருந்து வருகிறோம். நாடு விடுதலையடைந்து, நம்மாட்சி ஏற்பட்டுப் பதினெட்டாண்டு களாகியும் இன்னும் நம்மை நாமே காத்துக் கொள்ளும் அத்தகு நிலையை அடைந்தோமில்லை.

மேற்கிலும் கிழக்கிலும் பக்கத்துப் பகையாகிய பாகித்தான் வேறு பெருந்தொல்லை கொடுத்து வருகிறது. அது இந்தியத் தாயின் இரு தோள்களிலும் எந்நேரமும் ஈட்டி கொண்டு தாக்கி வருகிறது. இது உடன்பிறந்தே கொல்லும் நோய் போலும் உள்நாட்டுப் பகை. அது தன் ஆதிக்கத்தைப் பெருக்கிக்கொள்ள முனைந் துள்ளது. அதற்காக அது சீனாவுடன் உறவாடி வருகிறது. இந்தியாவைத் தாக்கச் சீனாவுக்குப் பாகித்தான் உதவி, பாகித் தானுக்குச் சீனா உதவி என்ற நிலையில் அவ்விரு நாடுகளும் செயல்பட்டு வருகின்றன. பாகித்தானின் பகையைத் தீர்த்துக் கொள்ளாதிருப்பது புண் வைத்து மூடுவது போன்றதாகும். செஞ்சீனத்துக்கொரு முடிவுகட்டாதிருப்பது கொள்ளிக் கட்டையைக் கூரையில் சொருகி வைத்திருப்பது போன்றதாகும்.

மற்றும் நாகர் கலகம், காசுமீர்ப் பிரச்சினை, சேக் அப்துல்லாவின் அடாச்செயல், உணவுப் பொருள் பற்றாக் குறை போன்ற எத்தனையோ தொல்லைகள் நம் இந்திய அரசுக்கு.

“பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு”

என்ற வள்ளுவர் வாய்மொழி இங்கு நினைவுகூரத்தக்கது.

மேலும், நாம் முழுக்க முழுக்க நம்பியிருக்கும் உலக வல்லரசுகள் மூன்றும் அன்றிருந்த நிலையில் இன்றில்லை. அதற்கும் செஞ்சீனரின் தீச்செயலே காரணமாக உள்ளது. உலக வல்லரசுகளின் ஒற்றுமையைக் குலைக்க வியட்நாமில் வேட்டு வைக்கிறது செஞ்சீனம்.

இதுபோது, நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப் பாட்டுணர்ச்சியும் மிகமிக இன்றியமையாத தென்பதை ஆட்சித் தலைவர்கள் நன்கு உணரவேண்டும். இந் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும், ‘உயிரைக் கொடுத்தேனும் எங்கள் நாட்டைக் காப்போம்’ என்று உறுதிகொள்ளும்படி செய்வது ஆளுங் கட்சி யினரின், ஆள்வோரின் இன்றியமையாக் கடமையாகும். இதற்குக் கொள்கைவேறுபாடு குறுக்கிடக்கூடாது.

ஆனால், இந்நிலையில் இன்று இந்நாட்டை ஆள்வோர்க்கு நாட்டைச் சூழ்ந்துள்ள பகையிருளை அடியோட கற்ற முழு முயற்சி எடுத்துக்கொள்வதைவிட, மிகமிக இன்றியமையாத தாகத் தோன்றுவது ஆட்சிமொழிக் கொள்கையேயாகும்.

அவ் வாட்சிமொழிக் கொள்கை இன்று இந்திய ஆட்சி வட்டாரத்தை, ஆட்சித் தலைமையை ஒரு தொத்துநோயாகப் பிடித்து வாட்டிவருகிறது. இவ்வாட்சிமொழித் திட்டம் நடைமுறைக்கு வராவிட்டால் இந் நாட்டாட்சியே நடைபெறாது-நடத்தமுடியாது போன்ற அத்தகு நிலையில் உள்ளனர் இன்று ஆட்சித்தலைவர்கள். ஆட்சித் தலைமையில் உள்ளவர்கள் ஆட்சிமொழிபற்றிக் கருத்துத் தெரிவியாத நாளே இல்லை எனலாம். அவ்வளவு இன்றியமையா நிலையை அடைந்துவிட்டது இன்று ஆட்சிமொழிக்கொள்கை.

ஆட்சிமொழிக் கொள்கைபற்றிப் பேசும் ஒவ்வொரு தலைவரும் வகையாகப் பேசி வருகின்றனர். அவர்கள் கூற்றுக்கள் தெளிவற்ற மயக்க நிலையில் உள்ளனவாகை யால், இந்நாட்டு மக்கள் ஆட்சிமொழித் திட்டம் இன்ன என்பதை அறிந்து கொள்ளமுடியாத நிலையில் இருந்து வருகின்றனர்.

ஆட்சிமொழித் திட்டத்தை நடுவு நிலையில் நின்று நன்கு ஆய்ந்து நல்லதோர் முடிவு காண்பதே இக் கட்டுரையின் நோக்க மாகும்.

இந்தி எதிர்ப்பு


இந்நாட்டில் ஆங்கில ஆட்சி ஏற்படுமுன் இந்தியா என்றும் ஒரே நாடாக ஓராட்சியின் கீழ் இருந்ததில்லை. வடநாடு பலமொழி பேசும் பல சிறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. தமிழ் நாடு தமிழ்மொழி பேசிய முடியுடை மூவேந்தர் களால் முறையாக ஆளப்பட்டு வந்தது. ஆங்கில ஆட்சி யாளர்களால் தான் இந்தியா ஓராட்சியின்கீழ் ஒரே நாடாக உருவாக்கப் பட்டது. ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்த காந்தியடிகளால், இந்நாட்டு மக்களுக்கு, ‘இந்தியா எங்கள் நாடு’ என்னும் உணர்ச்சி ஊட்டப்பட்டது.

விடுதலை வேட்கைகொண்ட தமிழர், தமிழன் என்ற இனவுணர்ச்சியை மறந்து, ‘நான் ஓர் இந்தியன்; இந்தியா எங்கள் சொந்த நாடு’ என வாய்விட்டுக்கூறத் தலைப்பட்டனர். விடுதலைப் போரின் முன்னணியில் முனைந்து நின்றது தமிழ் நாடு.

ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்க, இந்திய மக்களுக்கு ஒருமை யுணர்ச்சியும் நாட்டுப் பற்றும் ஊட்ட, காந்தியடிகளால் மேற் கொள்ளப்பட்ட-கையால் நூல் நூற்றல், கதர் உடுத்தல், கதர்க் குல்லாயணிதல், தந்நாட்டுப் பொருளோம்பல், அயல் நாட்டுப் பொருள் நீக்கல், மதுவிலக்குப் போன்ற கருவிகளில் இந்தியும் ஒன்றாகும். விடுதலை வேட்கை கொண்ட தமிழர்-இந்தி படிக்கத் தொடங்கினர். தமிழ் நாட்டில் இந்திப் பிரசார சபை தோன்றியது.

இது, இந்தியா ஒரே நாடு. அதற்கொரு பொதுமொழி வேண்டும். இந்தி இந்தியாவின் பொதுமொழி எனக் கொண்டதாகும். இதுவே இந்தி இந்தியாவின் பொதுமொழி என்பதன் பழைய வரலாறு.

இந்தியா விடுதலை அடைந்தது. இந்தியர்-இந்தி பேசுவோர்-இந்தி பேசாதார் மீது குதிரையேறத் தலைப்பட்டனர்; ஆளுங்கட்சிக் கொள்கையின் உதவியால், ‘இந்தி இந்தியாவின் ஆட்சிமொழி’ எனச் சட்டம் செய்து கொண்டனர். அன்றிருந்து இந்தியரின் மொழிவெறிச் செய்கைகளைக் கண்ட தமிழர் இந்தியை எதிர்க்கத் தொடங்கினர்; இந்தி இந்தியாவின் பொது மொழி என்று அன்று மேற்கொண்டனரே யன்றி, ஆட்சி மொழி எனக் கொள்ளவில்லை. 1937-38 லேயே தமிழர் கட்டாய இந்தியை எதிர்த்து வெற்றி கண்டது குறிப்பிடத் தக்கது.

பின்னர், ‘பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்தி இந்தியாவின் ஆட்சிமொழி ஆகவேண்டும்’ என, இந்தி பேசாதாரின் எதிர்ப் பைப் பொருட்படுத்தாது, ஒருவாக்கு மிகுதியால் சட்டஞ் செய்யப்பட்டது. அதுகண்ட இந்தி பேசாதாரின் சிறப்பாகத் தமிழரின் எதிர்ப்பைக்கண்ட காலஞ்சென்ற தலைவர் நேரு அவர்கள், ‘இந்தியோடு தொடர்ந்து ஆங்கிலமும் இணையாட்சி மொழியாக இருந்து வரும்’ என உறுதிமொழி தரவே, தமிழர்கள் ஒருவாறு சரியென்றிருந்தனர்.

1965 சனவரி 26 குடியரசு நாளன்று, இந்தியை இந்தியாவின் ஆட்சிமொழியாக நடைமுறைக்குக் கொண்டுவருவதாக இந்திய அரசினர் முடிவு செய்தனர்.

அதுகண்ட தமிழ்நாட்டு மாணவர்கள், சனவரி 25-ஆம் நாளன்று இந்தி எதிர்ப்புப்போர் தொடங்கினர். தமிழ் நாட்டிலுள்ள எல்லாக் கல்லூரி, உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் ஒருசேர அவ்வறப்போரில் கலந்து கொண்டனர். மாணவர் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி தமிழ்நாடெங்கும் தொடர்ந்து நடந்துவந்தது. (சில இடங்களில் மாணவரல்லாதார் கலந்து செய்த வன்முறைச் செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத் தக்கவையாகும்.) திராவிட முன்னேற்றக் கழகம், சனவரி 26-ஆம் நாளைத் துக்கநாளாகக் கொண்டாடுவதென முடிவு செய்தது. கழக முதன்மையாளர் பலர் அதன் முன்னரே சிறை யிடப்பட்டதால், அம்முடிவு கைவிடப்பட்டது.

தமிழ்நாட்டு மாணவர்களின் இம்மொழிப்போர் இதுவரை உலகங் கண்டறியாத ஒன்றாகும். தமிழ்நாட்டு மாணவர்களின் இம் மொழிப்போரைக் கண்டு உலகமே வியந்தது. தாய்மொழிக்காக, தமிழினத்துக்காக, தடியடிபட்டும் வெடியடி பட்டும் செந்நீர் சிந்தியும் இன்னுடல் குன்றியும் ஆருயீர் விட்டும் அருஞ்சிறைப்பட்டும் தமிழ் மாணவர்கள் ஆற்றிய அரும்பெருந் தொண்டு பாராட்டிப் போற்றுதற்குரிய தொன்றாகும். சில தமிழ் இளைஞர்கள் தாய்மொழிக்காக எரி யூட்டித் தற்கொலை செய்து கொண்டு பொன்றாப் புகழெய்தினர்.

தமிழ்நாட்டு மாணவர் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஆதரித்து-மலையாள, கன்னட, தெலுங்கு முதலிய இந்தி பேசாத மாநில மாணவர்களும் சிற்சில இடங்களில் இந்தியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர். தமிழ் மாணவர்களின் இந்தி எதிர்ப்புக்கு உறுதுணையாக, தமிழ்நாட்டு இந்திய அமைச்சர் களான திரு. சுப்பிரமணியம் அவர்களும், திரு. அழகேசன் அவர்களும் தங்கள் பதவியை விட்டு விலகினர். கல்வித் துறை வல்லுநர்களும், பிற அறிஞர்களும் ஆட்சிமொழி பற்றிய தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இந்தியத் தலைமை அமைச்சர் அவர்கள் மாநில முதலமைச்சர் களையும், மைய அமைச்சர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்து, ஆட்சிமொழிபற்றி ஆராய்ந்தனர். காங்கிரசுத் தலைவர் திரு. காமராசர் அவர்களும் தம் கருத்தைத் தெரிவித்தனர். திரு. சாஸ்திரி அவர்கள், இந்தி பேசாதார்க்கு, தமிழர்க்கு-தீங்கு நேராத வகையில் ஆட்சி மொழிச் சட்டத்தைத் திருத்துவதென்ற முடிவுக்கு வந்தனர்.

தமிழ்நாட்டு மாணவ இந்தி எதிர்ப்புக் குழுவினர், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை நிறுத்திவைப்பதென முடிவு செய்தனர். 27-1-65 முதல் மூடப்பட்டிருந்த கல்லூரிகளும் பள்ளிகளும் 8-3-65 அன்று திறக்கப்பட்டன. மாணவர்கள் கல்லூரிக்கும் பள்ளிக்கும் சென்றனர். சிறைவைக்கப்பட்டிருந்த எல்லா மாணவர்களும் விடுதலை செய்யப் பட்டனர்.

ஆட்சிமொழி பற்றிய அரசியல் சட்டத்தை எவ்வாறு திருத்துவதென்ற ஆராய்ச்சியில் ஆட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவே இன்றைய ஆட்சிமொழிபற்றிய வரலாறாகும். அச்சட்டத் திருத்தத்திற்குத் துணைசெய்யவே இக் கட்டுரை எழுதப்பட்டது.

தேசீயமொழிகள்


இந்தியாவில் பலமொழிகள் பேசப்படுகின்றன. அவற்றுள் திருந்திய மொழிகள் சிலவே. அவற்றுள் கீழ்க்காணும் 14 மொழிகளும் தேசீய மொழிகளாக இந்திய அரசியல் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. அவை :

1.  தமிழ்

2.  தெலுங்கு

3.  கன்னடம்

4.  மலையாளம்

5.  மராத்தி

6.  குசராத்தி

7.  பஞ்சாபி

8.  வங்காளி

9.  ஒரியா

10. அஸ்ஸாம்

11. காசுமீரி

12. இந்தி

13. உருது

14. வடமொழி

-   என்பனவாம்.

இவற்றுள், வடமொழி (சமஸ்கிருதம்) - எங்கும் பேசப்படுவதில்லை; செய்யுள் வழக்கு மொழியாக உள்ளது. உருது-வட மாநிலங்களில் ஒரு சாராரால் பேசப்படுகிறது. உருது-இந்தியின் உட்பிரிவுகளில் ஒன்றாகவும் உள்ளது. இந்தி-இராசத்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய நான்கு மாநிலங்களில் பல்வேறுவகையாகப் பேசப்பட்டு வருகின்றது. மற்ற பதினொரு மொழிகளும் அந்தந்த மாநிலங்களின் மாநில மொழியாகவும், தாய் மொழியாகவும் உள்ளன. இவற்றுள் தமிழே மிகப் பழமையான தனிமொழியாகும்.

ஆட்சிமொழித்திட்டம்


மக்கள் ஒருவர்க்கொருவர் தத்தம் கருத்தைப் பரிமாறிக் கொள்ளும் கருவியாக அமைந்தது மொழி என்பது. ஆட்சிமொழி-ஆட்சி நடத்துவதற்குக் கருவியாகக் கொள்ளும் மொழி யாகும்.

இந் நாட்டில் பல மொழிகள் வழங்குவதால், இந்தியப் பொது ஆட்சி நடத்துதற்கும், மாநிலத் தொடர்புக்கும் ஒரு பொதுமொழி தேவையாகிறது.

ஆட்சிமொழித் திட்டத்தில் இடம்பெறும் மொழிகளாவன:

1.  தாய்மொழி, அல்லது மாநிலமொழி,
2.  இந்தி,
3.  ஆங்கிலம் - என்னும் மூன்றும் ஆகும்.

மூன்று மொழிகளை ஒரு நாட்டின் ஆட்சிமொழியாக்க முனைவதால், ஆட்சிமொழித் திட்டம் என்பது, ஆட்சி மொழிச் சிக்கலாக ஆகியுள்ளது.

இவற்றுள், மாநில ஆட்சிமொழி பற்றிச் சிக்கல் எதுவுமில்லை. தமிழ், தமிழ் நாட்டின் ஆட்சிமொழியாக இருக்கும். இவ்வாறே ஏனைய மாநில மொழிகளும் அந்தந்த மாநிலங்களின் ஆட்சிமொழிகளாக இருக்கும். இந்தி, இந்திபேசும் மாநிலங் களின் ஆட்சிமொழியாக இருக்கும்.

இந்திய ஆட்சிமொழியாகவும், மாநிலங்களின் தொடர்பு மொழியாகவும் இருக்கவேண்டும் என்னும் இந்தி, ஆங்கிலம் ஆகிய இருமொழிச் சிக்கல்தான் இன்று பிரிக்க முடியாத பெருஞ்சிக்கலாக உள்ளது. அதிலும், மாநில ஆட்சி மொழியாக உள்ள இந்தியை, மைய ஆட்சிமொழியும் ஆக்க வேண்டும் என்பதுதான் இச்சிக்கலுக்கே முதற்காரணமாகும்.

அச்சிக்கலாவது:

1.  இந்திய நாட்டில் வழங்கும் ஒரு மொழிதான் இந்தியாவின் ஆட்சிமொழியாகத் தகுதியுடையதாகும்.

2.  இந்திய மக்களில் பெரும்பாலோரால், மூன்றிலொரு பங்கினரால் பேசப்படுவதால், இந்தியே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கத் தகுதியுடைய தாகும்.

3.  இந்தி-இந்தியா என்னும் பெயரொற்றுமையால் ஒருமைப் பாட்டுணர்ச்சி உண்டாகுமாகையால், இந்தி தான் இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கத் தகுதியுடையதாகும்.

4.  இந்தியோடு ஆங்கிலமும் இணையாட்சி மொழியாக இருந்து வரலாம்; வரவேண்டும்.

5.  இந்தி ஆங்கிலத்தின் நிலையை அடையும் வரையிலும் ஆங்கிலம் இந்தியோடு இணையாட்சி மொழியாக இருந்து வரவேண்டும்.

6.  இந்தி பேசாத மாநில மக்கள் விரும்புகிறவரை ஆங்கிலம் இணை யாட்சிமொழியாக இருந்துவரவேண்டும்.

7.  என்றைக்கிருந்தாலும் ஒரு நாளைக்கு இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழியாகத் தகுதியுடையது.

8.  என்றோ ஒரு காலத்தே ஆங்கிலம் அடியோடு அகற்றப் பட வேண்டியதே.

9.  ஆங்கிலம் அயல்மொழியானதால், நம்மை அடக்கியாண்டவர் மொழியானதால் அது கூடவே கூடாது. அதைக் கற்பது நம் தன்மானத்துக்கு உகந்ததாகாது.

10. உடனடியாக இந்தியையே ஆட்சிமொழி ஆக்கிவிட வேண்டும்.

11. இந்தியை ஆட்சிமொழி ஆக்கக்கூடாது; ஆங்கிலமே இன்று போல என்றும் ஆட்சிமொழியாக இருந்துவர வேண்டும்.

12. தேசீய மொழிகள் பதினான்கையும் ஆட்சிமொழி ஆக்க வேண்டும்.

13. மாநிலமொழி அல்லாத இந்தி ஒன்றை ஆட்சி மொழியாக உருவாக்க வேண்டும்.

14. இந்தி பேசாதார் இந்தியைக் கற்பதுபோல, இந்தி பேசுவோர் தென்னாட்டு மொழிகளில் ஒன்றைக் கற்க வேண்டும்.

15. இந்தி பேசாதார்மீது இந்தியைத் திணிக்கக் கூடாது; இந்தி பேசுவோர் மீது ஆங்கிலத்தைத் திணிக்கக் கூடாது. இன்னும் பலவகை.

இவ்வாறு ஆட்சிமொழித் திட்டம்பற்றிக் கருத்துத் தெரிவிப் போர் மூன்றுவகையினராவர். அவராவர்;

1.  காங்கிரசுக் கட்சியினர்-ஆளுங்கட்சியினர்-இன்றைய ஆட்சியாளர்.

2.  இந்திபேசுவோர்

3.  இந்திபேசாதார் - என்பவராவர்.

முதலில் இம் மூவகையினர் நிலையையும் அறிதல் ஆட்சி மொழித்திட்டம் பற்றிய கருத்து வேறுபாட்டு விளக்கத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

1.  காங்கிரசுக் கட்சியினர்: காங்கிரசுக் கட்சியின் ஆக்கத்திட்டங்களுள் இந்தியும் ஒன்றாகும். இந்தி இந்தியாவின் பொதுமொழியாக இருக்கவேண்டும் என்பது காங்கிரசின் பழையகொள்கை. அதன்படி இந்தியை இந்தியா வின் ஆட்சிமொழி யாக்க விரும்புவது காங்கிரசுக்காரரின் கடமையே ஆனால், பழைய கொள்கைகளை அப்படியே கடைப்பிடிக்க விரும்பாத காங்கிரசுக்காரர் சிலர் இருந்து வருவதனாலும், இந்தி இன்னும் ஆட்சிமொழிக்குரிய தகுதியை அடையாததனாலும், இந்தி பேசாதார் எதிர்ப்பைத் தணிப்பதற்காகவும், இந்தியோடு ஆங்கிலமும் இணையாட்சி மொழியாக இருந்து வரலாம் என்கின்றனர்.

எனவே, ஆளுங்கட்சியினர் இந்தி இந்தியாவின் ஆட்சி மொழியாகவேண்டும் என்பதில் வியப்பொன்றுமில்லை.

கட்சித் திட்டங்களை நிறைவேற்றுவது, கொள்கையைக் கடைப் பிடிப்பது அவர்தம் கடமையேயாகும். எனினும், நாட்டு நலத்தையும், எதிர்கால நிலையையும், இந்நாட்டு மக்கள் எல்லோருடைய நலஉரிமையினையும் எண்ணிப் பார்த்து, காலத்துக்கேற்பப் பழைய கொள்கைகளை விட்டுப் புதிய கொள்கைகளை மேற்கொள்வதும் கட்சியின் கடமை யேயாகும். கொள்கையும் திட்டமும் என்றும் நிலைபேறுடை யவை அல்ல; காலப் போக்கின் சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றிக்கொள்ளத் தக்கனவே யாகும்.

“பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகை யினானே.”

-   ( நன்னூல்)

என்பது, கட்சிக்கும் விலக்கானதன்று. காலச் சூழ்நிலைக் கேற்றவாறு காந்தியடிகள், தனித்தொகுதி முறைக்கும், பாகித்தான் பிரிவினைக்கும் உடன்பட்டதும், திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவினைக் கொள்கையை மாற்றிக் கொண்டதும் நினைவு கூரத்தகும்.

இன்று காங்கிரசுக்காரர் யாவரும் நூல் நூற்பதோ, காந்தி குல்லாய் அணிவதோ இல்லை. அயல்நாட்டுப் பொருள்களைப் பயன்படுத்தாத காங்கிரசுக்காரர் இன்று யாரும் இல்லை எனலாம். நாட்டு மக்கள் நலத்திற்காகக் கொள்கையே யன்றிக் கட்சிக் காகவன்று கொள்கை. காலத்திற்கேற்பக் கொள்கைகளை மாற்றிக்கொள்வதே கட்சி நலனும் கட்சி வளர்ச்சியும் நாட்டுக்குச் செய்யும் நன்மையும் ஆகும் என்பதை ஒவ்வொரு காங்கிரசுத் தலைவர்களும் எண்ணிப் பார்க்கவேண்டும்.

இன்று இந்தி பேசாத காங்கிரசுக்காரர்களெல்லாரும், காங்கிரசுத் தமிழர் களெல்லாரும்-இந்தி மட்டுந்தான் ஆட்சி மொழியாக இருக்கவேண்டும். ஆங்கிலம் கூடவே கூடாது என்னும் கொள்கை யுடையவர் என்று கூற முடியாது; கட்சிக் கட்டுப்பாட்டினால் தங்கள் உண்மைக் கருத்தை வெளியிட முடியாத நிலையில் இருந்து வருகின்றனர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஒருசிலர் வாய்விட்டுச் சொல்லாமலும் இல்லை. மெல்லவு முடியாமல் விழுங்கவு முடியாமல் இருப்பதைவிட, நாட்டு நலனைக்கருதி, நாட்டின் ஒற்றுமையைக் கருதி உண்மையை உரைப்பதே கட்சி நலனுமாகும். எதிர்ப்புக் காங்கிரசுக்காரர் ஆவதினும் இது கோடி மடங்கு நல்லதாகும்.

2.  இந்தி பேசுவோர்: இந்தி, இலக்கிய வளமும் இந்நாட்டுப் பழந் தனிப் பெருமையும் உடைய மொழியாக இல்லா திருந்தும், ஆட்சிமொழிக்கேற்ற தகுதியுடைய தல்லா திருந்தும், தங்கள் தாய்மொழி ஆட்சிமொழியானால், இந் நாட்டில் தாங்கள் ஆதிக்கம் பெற்று மேம்பாடுற்று மேன் மக்களாக வாழலாம் என்ற ஒரே நோக்கத்தால், இந்நாட்டின் நலனையும், இந்தி பேசாத இந்நாட்டு மக்கள் நலத்தையும் கருதாமல், இந்தியை மட்டும் இந்தியாவின் தலைமை ஆட்சிப் பீடத்தில் அமர்த்திவிட வேண்டும் என்று இந்தி பேசுவோர் விடாப்பிடி செய்து வருகின்றனர். இதில் ஒருசிலர் விலக்காக இருக்கினும் பெரும்பாலோர்க்கு இம்மொழி வெறி தலைக்கேறி உள்ள தென்பதில் சிறிதும் ஐயமில்லை. இவர்கள் ஆங்கிலத்தை வெறுப்பதன் காரணமும் இத்தன்னலத் தினாலேயாகும்.

தன் பிள்ளையைப் பல்லக்கிலேற்றி, அதனோடொத்த மற்ற பிள்ளைகள் வலுக்கட்டாயமாய் அதைச்சுமக்க வைத்து, மற்ற பிள்ளைகளின் தாய்மார்களுடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் தன் பிள்ளையை ஆளாக்குவாளா ஒரு தாய்? அது தாய்மைத் தன்மை யாகுமா என்பதை இந்தி பேசுவோர் சிறிது எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்நாட்டின் விடுதலைக்காகப் பலவகையான இன்னல் களடைந்தும், உயிர்விட்டும் அரும்பெருந் தொண் டாற்றிய விடுதலை வீரர்களின் வழித்தோன்றல்களாகிய இவர்கள், இந்நாட்டு நலனையும் இந்தி பேசாத இந்நாட்டு மக்களின் நல் வாழ்வையும் கருதித் தாய்நாட்டுக்காகச் சிறிது விட்டுக் கொடுக்கின், ஆட்சி மொழிச் சிக்கல் எளிதில் தீர்ந்துவிடும் என்பதைச் சிறிது எண்ணிப் பார்த்தல் அன்னாரின் நீங்காக் கடமையும் தாய்நாட்டுத் தொண்டு மாகும். ‘தனக்குள்ளது பிறர்க்கும் உண்டு’ என்பதை அவர்கள் உணர வேண்டும். தங்களைப் போலவே இந்தி பேசாத மாநிலத்தார் ஒவ்வொரு வரும் தத்தம் தாய்மொழியை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்கவேண்டும் என்று விடாப்பிடி செய்தால் இந்நாட்டின் நிலை என்னாகு மென்பதையும் அவர்கள் எண்ணிப்பார்த்தல் வேண்டும்.

தென்னாப்பிரிக்காவில் அன்று நடத்திய அறப்போர் வீரர்களாகத் தமிழக் கந்தனும் வள்ளியும் முதன்முதல் முன் வந்தது கண்ட காந்தியடிகள், அதற்குக் காரணம் அவர்தம் தாய் மொழியான தமிழ்மொழியின் தனிப்பண்பே எனக் கொண்டு, ‘இந்தியாவைவிட்டு ஒருகாலத்தே வெள்ளையர் கப்பலேறினால், இந்தியாவின் பொதுமொழியாகுந் தகுதி தமிழுக்குத்தான் உரித் தாகும்’ என்ற காந்தியடிகளின் கூற்றினைச் சான்று காட்டி, உலக முதன்மொழியாக உடையதும், அப்பழமைக் கேற்ற இளமையுடையதும், இலக்கிய வளமும் இலக்கண வரையறையு முடையதும், தன்னோடொப்ப எண்ணப்படும் - லத்தீன், கிரேக்கம், எகுபதியும், ஈப்புரு, ஆரியம் முதலிய பண்டை மொழிகளெல்லாம் பேச்சு வழக்கற்றுப்போயும், தான் மட்டும் அன்றேபோல் இன்றும் உலக வழக்கும் செய்யுள் வழக்கும் ஒருங்குடைய உயர்தனிச் செம்மொழியாக உடையதும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் அரியணையில் இனி தமர்ந்து நாடாண்ட பயிற்சியுடையதும், ஆட்சித்திறனும் அதற்கேற்ற தகுதியும் ஒப்ப உடையதும், ஒருகாலத்தே குமரி முதல் இமயம் வரை அரசு வீற்றிருந்ததும், இயல்பும் எளிமை யும் இனிமையும் தனிமையும் உடையதுமான தன்னேரிலாத தங்கள் தாய்மொழியாம் தமிழ் மொழியை, ‘இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்குங்கள்’ என்று தமிழர் கூறாமல் இருப்பது, இந்நாட்டு நலத்தைக் கருதியேயாம் என்பதை இந்தி பேசுவோர் உணர வேண்டும். தமிழர் இந்தியை எதிர்ப்பதற் குரிய காரணமே மற்றவர் தமிழை எதிர்ப்பதற்கும் பொருந்தும் என்பதை உணர்ந்தே அவர்கள் அவ்வாறு எண்ணவும் ஆவல் கொள்ள வில்லை.

3.  இந்தி பேசாதார் - தமிழர்: இந்தி ஆட்சிமொழி ஆனால் தங்கள் தாய்மொழி கெடும், தங்கள் பண்பாடு கெடும், தங்கள் இனம் கெடும், தங்கள் வாழ்வு கெடும் என அஞ்சியே தமிழர் இந்தி ஆட்சிமொழி ஆவதை எதிர்க்கின்றனர். இது அவர்தம் கடமையேயாகும். மேலும், நாட்டுப்பற்று மிகுதியாக உடைய தமிழர், இந்நாட்டின் ஒற்றுமையினையும் ஒருமைப் பாட்டினையுங் கருதியே இந்தியை எதிர்க்கின்றனர். ஆனால், இந்திய ஆட்சிக்கு ஒரு பொதுமொழி வேண்டும். ஆங்கிலமே அதற்குத் தகுதியுடையதாகும் என்பதை உணர்ந்தே, ‘ஆங்கிலமே இன்று போல் என்றும் இந்தியாவின் ஆட்சிமொழி யாக இருந்துவர வேண்டும்’ என்கின்றனர். இங்ஙனமன்றி, ‘ஆங்கில மோகத்தால் ஆங்கிலம் வேண்டும் வேண்டும் என்கின்றனர்’ என்பது சிறிதும் பொருந்தாது. ஆங்கிலம் என்ன தமிழின் சார்புமொழியா? அல்லது தமிழினும் இனிய மொழியா? தமிழர் மோகங்கொள்வதற்கு!

இனி, இந்தி பேசாத பிற தென்னாட்டினர் வாளா இருக்க, தமிழர் மட்டும் ஏன் இந்தி ஆட்சிமொழி ஆவதை எதிர்க்க வேண்டும் எனில்,

அளவு கடந்த அயல் மொழிக் கலப்பாலும், அயல் மொழியின் ஆதிக்கத் தாக்குதலாலும் பழந்தமிழ் திரிந்துண் டாயினவே தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்னும் தென்னாட்டு மொழிகள் மூன்றும்.

“கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்”

-   (மனோன்மணீயம்)

இனிச் சிலப்பதிகாரம் செய்த இளங்கோவடிகள் பேசிய பழந்தமிழ், கி.பி-9ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே மலையாள மொழியாகத் திரிந்தது. மலையாளிகள் தங்களைப் பழந்தமிழரின் வழியினர் என்பதையே அறியாத நிலையை அடைந்துவிட்டனர்.

எனவே, வடமொழிச் சார்பினை அடைந்த அம்மொழியினர்க்கு, வடமொழிச் சார்புடைய, வடமொழியின் மறுபதிப்பான இந்தியின் அயன்மை உறைக்காமையே அவர்கள் இந்தி ஆட்சிமொழி ஆவதை இன்று எதிர்க்காமையின் காரண மாகும். இந்தி மட்டும் இந்தியாவின் ஆட்சிமொழியானால் அன்னாரும் எதிர்க்கத் தலைப்படுவர் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. அந்நிலையை உண்டாக்கக் கூடாதென்பதற்காகவே இன்று தமிழர் இந்தியை எதிர்ப்பதன் நோக்கமாகும்.

இந்தியோடு ஆங்கிலமும் இருந்துவரலாம். இந்தி மட்டும் போதும். இந்தி கூடாது; ஆங்கிலமே போதும் -என்னும் அம்மூவர் நிலையினையும் ஓர்ந்தறிக.

ஆட்சிமொழித்திட்ட விளக்கம்
1.  பலமொழி வழங்கும் இந்நாட்டின் தலைமை ஆட்சிக்கும், மாநிலத் தொடர்புக்கும் ஒரு பொது மொழி வேண்டும். இந்நாட்டு மொழிகளான தேசீய மொழிகள் 14 இல் எதை நாட்டுப் பொது மொழி ஆக்குவது? ஏதாவ தொன்றினைப் பொதுமொழி யாக்க மற்ற மொழியினர் ஒத்துக்கொள்வார்களா? பிறர் விரும்பாது அவர்மீது சட்டத்தின் மூலம் வலுக்கட்டாயமாக ஒரு மொழியைத் திணித்தால் பிணக்கும் பூசலுமல்லவோ உண்டாகும்? அவ்வாறு வலுக் கட்டாயமாகத் திணிப்பது மக்களாட்சி முறைக்கு ஒத்த தாகுமா?

இரு கட்சியினர் விளையாடும் போட்டி விளையாட்டுக்கு, அவ்விரண்டில் ஒரு கட்சிக்காரரை நடுவராகப் போட மற்ற கட்சியினர் ஒத்துக்கொள்வாரா? அவ்விரு கட்சியினும் சேராத மற்றொருவரை, அயலாரொருவரை நடுவராகப் போடுவதே வழக்கம். அவ்வாறே, இந்நாட்டு மக்கள் பேசும் மொழியல்லாத ஒர் அயல்மொழியை ஆட்சிமொழி ஆக்குவதே ஏற்ற முறையாகும்.

2.  இனி, இந்தி இந்தியமக்களில் பெரும்பாலோரால் பேசப்படுகிறது, மூன்றிலொரு பங்கினரால் பேசப்படுகிறது என்பதும் உண்மையில்லை. ஏனைத் தேசீய மொழிகள் ஒவ்வொன்றையும் விட இந்தி பெரும்பான்மையோரால் பேசப் படுவதில்லை.

இராசத்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார் என்னும் நான்கு மாநிலங்களில் ஒன்றுக்கொன்று தொடர் பில்லாத பதினொரு மொழிகள் பேசப்படுகின்றன. இப்பதினொன் றையும் இந்தி என்னும் பெயரால் குறித்து, இந்தி பெரும்பான்மை யோரால் பேசப்படுகிறது என்கின்றனர். அப்பதினொன்றையும்-மேல்நாட்டு இந்தி, கீழ்நாட்டு இந்தி, பிகாரி என மூன்று வகையாகப் பிரித்துக் கூறுவர் மொழி நூல் வல்லுநர். அவையாவன:

1.மேல்நாட்டு இந்தி: பாங்காரு, பிரஜ்பாஷா, கனோஜ், பந்தேலி, உருது.

2.  கீழ்நாட்டு இந்தி: அவதி, பகேலி, சத்தீஸ்கரி.

3.  பிகாரி: மைதிலி, போஜ்புரி, மககி.

இப்பதினொன்றில் ஒன்று பேசுவோர்க்கு மற்றொன்று புரியாது. பீகார் மாநிலத்தில் பேசப்படும் பிகாரியின் ஒரு பிரிவான மைதிலி என்னும் இந்தியே தமிழ்நாட்டுப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வருகிறது. மைதிலி-சில நூறாயிரம் பேராலேயே பேசப்படுகிறது.

தமிழ் நாட்டின் கண்ணேயன்றி, பர்மா, மலேயா, இலங்கை, தென்னாப்பிரிக்கா முதலிய வெளி நாடுகளில் வாழும் தமிழர் பேசும் தமிழும் ஒரே தன்மையாகவே உள்ளது. இங்ஙனம் உலக முழுவதுமுள்ள தமிழர் தொகையை விட, ஒவ்வொரு பிரிவு இந்தியும் ஒவ்வொரு கோடி மக்களால் பேசப்படுகிறது எனினும், தமிழ் மூன்றுகோடி மக்களுக்கு மேல் பேசப்படுகிறது. எனவே, இந்தி பெரும்பான்மை யோரால் பேசப்படுகிறது, மூன்றிலொரு பங்கினரால் பேசப் படுகிறது என்பது பொருந்தாக் கூற்றேயாகும்.

இனி, உருதுவைத் தேசீய மொழிப் பட்டியலில் சேர்த்தால், இன்னும் இப் பெரும்பான்மை குறையும்.

அப்படியே மூன்றிலொரு பங்கினரால் பேசப்படுகிறது என்று வைத்துக்கொண்டாலும், மூன்றில் ஒரு பங்கினர் மொழியை மூன்றில் இருபங்கினர் மீது திணிப்பது எங்ஙனம் மக்களாட்சி முறைக் கொத்ததாகும்?

3.  இனி, இந்தி-இந்தியா என்னும் பெயரொற்று மையால் ஒற்றுமையுணர்ச்சி உண்டாகும் என்பதும் பொருத்தமாக இல்லை. இன்று இந்தியா-பாரதம் என்றே வழங்கப்படுகிறது. பாரத அரசு, தென்பாரதம், அகில பாரதச் செய்தி அறிக்கை என்பன காட்டாகும். இந்தி-பாரதம், என்ன பெயரொற்றுமை!

இந்தி மொழியினால் இந்திய ஒருமைப்பாட்டுணர்ச்சி உண்டாகுமெனில், ஒரே மொழிபேசிய தமிழரசர்கள் மூவரும் பிற்காலத்தே பகைகொண்டு போர்க்களத்திலேயே வாழ்ந்து வந்ததும்; ஒரே மொழிபேசிய பாண்டவ கௌரவர் பகைவர்க

ளாகவே வாழ்ந்து வந்து முடிவில் போரிட்டடியோடழிந்தொழிந்ததும் எதனால்?

எனவே, இந்தி இந்தியாவின் ஆட்சிமொழி யாதற்குத் தகுதியுடைய தென்பது பொருத்தமுடையதாக இல்லை.

4.  இந்தியோடு ஆங்கிலமும் இணையாட்சி மொழியாக இருந்து வரலாம்; இருந்து வரவேண்டும்.

‘இருந்து வரலாம்’ என்பது - இல்லாமலும் இருக்கலாம் எனவும் பொருள் படுமாதலால், ‘இருந்து வரவேண்டும்’ எனத் திருத்த வேண்டும் என்பது ஒருசாரர் கருத்து. அடுத்தது இதற்கு விளக்கமாகும்.

5.  ‘இந்தி ஆங்கிலத்தின் நிலையை அடையும் வரையிலும் ஆங்கிலம் இந்தியோடு இணையாட்சி மொழியாக இருந்து வரவேண்டும்’ என்பதே, இந்திக்கு ஆட்சிமொழித் தகுதி இன்

றென்பதாகும். இந்தி ஆங்கிலத்தின் நிலையை என்றும் அடையப் போவதில்லை.

ஆங்கிலம் அறிவுக்களஞ்சியம், இலக்கியக் கருவூலம், உலக முழுதும் பரவியுள்ள மொழி, உலகையே கட்டியாளும் அத்தகு தகுதியும் திறனும் உடையது, அரசியல் துறை, அறிவியல் துறை, தொழில் துறை, வணிகத் துறை முதலிய எல்லாவற்றிலும் முதலிடத்தில் இருந்து வருகிறது; தலைமை தாங்கி வருகிறது எனலாம். இந்நிலையை இந்தி பல நூற்றாண்டுகளாயினும் அடைய முடியாதென்பது உறுதி.

6.  இந்தி பேசாத மாநில மக்கள் விரும்புகிறவரை ஆங்கிலம் இணையாட்சி மொழியாக இருந்துவர வேண்டும்.

இந்தி பேசாத மாநில மக்கள் எதற்காக இந்தி ஆட்சி மொழி ஆகவேண்டும் என்று விரும்புகின்றனர்? இந்தி பேசாத மாநில மொழி ஒன்று ஆட்சி மொழியாக இந்தியர் விரும்பு வாரா என்ன?

இந்தி பேசாத மாநில மக்கள் என்பது தமிழரையே குறிக்கும். இந்தியை நேரடியாக எதிர்ப்பவர் அவர்தானே? தங்கள் தாய்மொழி யாம் தமிழைக் கெடுக்கும், தமிழ்ப்பண்பாட்டைக் கெடுக்கும், தமிழரின் உயர்வைக் கெடுக்கும், தமிழரை இந்தியர்க்கு அடிமை யாக்கும், சொந்த நாட்டில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழச்செய்யும் ஒரு மொழியை; இலக்கியவளமில்லாத ஒரு மொழியைத் தமிழர் எதற்காக விரும்புகின்றனர்?

இன்று இந்தி ஆட்சிமொழி ஆகக்கூடாது; வலுக் கட்டாய மாய்த் திணிக்கக்கூடாது என்னும் தமிழர், எதற்காக ஒரு நாளைக்கு எதற்காக அதை விரும்பி ஏற்றுக்கொள் கின்றனர்? இன்று இந்திமொழிமீது வெறுப்புக்கொண்டா அதை வேண்டா மென் கின்றனர்? அவ்வெறுப்பு நீங்கி ஒரு காலத்தே விரும்புவதற்கு? என்றோ ஒரு நாள் விரும்பி ஏற்றுக்கொள்வதை இன்றே எதிர்ப் பின்றி ஏற்றுக்கொள் வரன்றோ? எதிர்கால விளைவை எண்ணி இத்தலைமுறையினரே எதிர்க்கும் போது, இந்தியினால் விளையும் தீங்கினை அடையும் அடுத்த தலை முறையினர் அதனை விரும்பு வாரா என்ன? ஒருக்காலும் விரும்பவே விரும்பார்?

4-இல் எதிர்ப்பைத் தணிக்க இந்தியோடு ஆங்கிலமும் இருந்து வரலாம் எனவும், 5. இல் இந்திக்கு அரசியற் பயிற்சி கொடுக்க ஆங்கிலம் இருந்து வரவேண்டும் எனவும், 6. இல் சில ஆண்டுகளில் அதிகாரத்தின் மூலமும், அலுவற் பயன்பாட்டின் மூலமும் இந்திபேசாதாரை - தமிழரை விரும்பும்படி செய்து விடலாம் எனவும்-படிப்படியாக இந்தியைத் திணிக்க எடுத்துக் கொள்ளும் முயற்சியாகக் கொள்ளவேண்டும்.

7.  என்றைக்கிருந்தாலும் ஒரு நாளைக்கு இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழியாகத் தகுதியுடையது.

8.  என்றோ ஒருகாலத்தே ஆங்கிலம் அடியோடு அகற்றப் பட வேண்டியதே.

இவ்விரண்டும் மேற்கூறியவற்றிற்கு (4-6) விளக்கமும் உறுதிப்பாடும் தருவனவாகும். இதிலிருந்து இந்தித் திணிப்புத் தொடங்குகிறது. என்றோ ஒரு நாளைக்கு இந்தியே இந்தியா

வின் தனியாட்சி மொழியாகும். அன்று ஆங்கிலம் அகற்றப்படும் எனக் கெடுவை ஏற்படுத்தினால், அதாவது பல ஆண்டுகளுக்குப் பின்னாவது இந்தி ஆட்சிமொழி ஆக வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டுவிட்டால், இப்பொழு திருந்தே சிறுகச் சிறுக இந்தியைத் திணிக்கும் வேலையும் தொடங்கும். திணிப்பை எதிர்க்கமுடியாது. எனவே, இவ்வாறு சட்டஞ் செய்தால், இன்றிருந்தே எதிர்ப் புணர்ச்சியும் எதிர்ப்பும் வலுப்பெற்றே வரும். ‘மூக்குள்ள வரையிலும் சளி’ என்பது போல, மொழிக் கிளர்ச்சி அடிக்கடி தோன்றி வளர்ந்து அது மொழிப் பூசலாக முடியும். இன்று இந்தியால் வரும் தீங்கு என்றும் வரும் என்பதை மறக்கக் கூடாது.

9.  ஆங்கிலம் அயல்மொழியானதால், நம்மை அடக்கியாண்டவர் மொழியானதால் அது கூடவேகூடாது. அதைக் கற்பது நம் தன்மானத்துக்கு ஏற்றதாகாது.

இது, உடனடியாக இந்தியை மட்டும் ஆட்சி மொழி யாக்கி விடவேண்டும் என்போர் திட்டம். இவ்வாறு கூறுவோரில் பெரும் பாலோர் ஆங்கிலப் பட்டதாரிகளே; ஆங்கிலத் தினாலே பேரும் புகழும் பெருவாழ்வும் பெற்றவர்களே. ஆங்கிலத்தை விட்டால் இந்திதானே என்பது இவர்கள் கொள்கை.

தான் பேசும் மொழி-தாய்மொழி; தன் சொந்தமொழி, அயலார் பேசும் மொழி-அயல் மொழி, ஆங்கிலம் இந்நாட்டு மக்களுக்கு அயல்மொழியெனில், ஆங்கிலத்தைப் போலவே இந்தி பேசாதார்க்கு-தமிழர்க்கு, இந்தியும் அயல்மொழியேயாகும்.

ஆங்கிலம் நமக்கு அயல்மொழியே எனினும், ஆங்கி லேயர் ஆட்சி இங்கு இன்மையால், ‘எங்கள் மொழி’ என உரிமை கொண்டாடுவோர் இங்கு இன்மையால், அம்மொழி மூலம் ஆதிக்கஞ் செலுத்த முற்படுவோர் இங்கு இன்மையால், ஆங்கிலம் ஆட்சிமொழியாக இருப்பதால் இந்நாட்டு மக்கள் எவர்க்கும் அதனால் தீமை ஒன்றும் இல்லை. ஆங்கிலம் இந்நாட்டு மக்கள் எல்லோர்க்கும் அயல் மொழியேயாதலால் ஒப்பக்கற்று ஒரு நிகராக வாழலாம்.

இந்தி பேசுவோர் இந்நாட்டின் ஒரு பகுதியினர் ஆகையால், இந்தியில் இந்தியா ஆதிக்கம் மிகும்; இந்தி பேசாதார் தாழ்வுறுவர். இந்தி இந்தியர்க்கு நன்மையாகவும் அல்லா தார்க்குத் தீமையாகவும் அமையும். மேலும், இந்தியர்க்கு நமது தாய்மொழி நம்போன்ற ஒரு சாரார் தாய்மொழிக்கு அடிமையாக நேர்ந்தது என்ற சிறுமையும் தோன்றி இந்நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும். ஆகையால், இந்தியினும் ஆங்கிலமே ஆட்சிமொழியாதற் கேற்றதாகும்.

ஆங்கிலம் நம்மை அடக்கியாண்டவர் மொழியெனில், அடக்கியாண்ட அயலாராகிய ஆங்கிலேயருடன் கைகுலுக்கிக் கொண்டு கொஞ்சிக் குலாவுகிறோம். அவர்கள் பொருளை விரும்பி ஏற்கிறோம். அன்னார் அறிவியற் கண்டுபிடிப்பு களை, தொழில் நுணுக்கக் கருவிகளை வாங்கிப் பயனடைந்து வருகிறோம். செஞ்சீனரை எதிர்க்க அன்னார் படைத் துணையைப் போர்க் கருவிகளை வேண்டி ஏற்றோம். இன்றும் நமது பகைவர்களை அடக்க அன்னார் உதவியை வேண்டி நிற்கிறோம். ஆனால், அவர்தம் மொழியை அயலார்மொழி, அயல்மொழி, அடக்கி யாண்டார் மொழி என்று வெறுத் தொதுக்க முனைவது எங்ஙனம் பொருளுடையதாகும்?

நாம் புதிதாக மேற்கொண்டுள்ள கிலோ, லிட்டர், மீட்டர் என்னும் அளவைகள் மூன்றும் ஆங்கில அளவை களே. 1-10 எண்ணும் ஆங்கில எண்களே, எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல் என்ற அளவைகள் நான்கும் எண் எனப்படும். ‘எண்ணும் எழுத்தும் மக்கட்கு இருகண்’ என்கின்றார் வள்ளுவர். ஆங்கி எண்ணை அயலெனப்பாராது பயன்படுத்திக் கொண்டு, எழுத்தை ‘அயல்’ என்று வெறுத்தல் எங்ஙனம் அறிவுடை மையாகும்? எண், எழுத்து இரண்டுங் கொண்ட தல்லவோ ஒரு மொழியாகும்?

அடக்கியாண்டோர் பொருள்களைப் பயன்படுத்தி வரும் நமக்கு, அவர்கள் எழுத்தைக்கற்பது எங்ஙனம் நமது தன் மானத்துக்கு ஏற்றதாகாது?

அடக்கியாண்டோர் மொழியைக் கற்பது மானக்கே டெனின், இந்நாடு விடுதலை அடைந்த 1947 ஆகஸ்ட் 15ஆம் நாளன்றே ஆங்கிலேயருடன் ஆங்கிலத்தையும் மூட்டை கட்டி அனுப்பி யிருக்கவேண்டும். அங்ஙனமின்றி, 18 ஆண்டுகளாக முன் போலவே ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டு, ஆங்கிலக் கல்வியின் தரத்தை உயர்த்தப் பலவகையிலும் முயற்சி எடுத்துக்கொண்டு, ஆங்கிலத்திலேயே 18 ஆண்டுகளாய் ஆட்சி நடத்திவிட்டு, இன்னும் நடத்திக் கொண்டே, அடக்கியாண்டார் மொழி ஆகாது, அதைக் கற்பது நம் தன்மானத்துக்கடுக்காது என்பதில் என்ன பொருள் இருக்கிறது?

நம்மை அடிமைப்படுத்தி அடக்கியாண்டஆங்கிலேயர்தான், ‘இந்தியா ஒரே நாடு’ என்ற ஒற்றுமை யுணர்வை ஏற்படுத்தினர். சில்லாந்தட்டியாய்ச் சிதறிக்கிடந்த இந்தியாவை ஓராட்சியின்கீழ் ஒரே நாடாக்கினர். நாடு முழுவதும் ஒரே அயலாட்சியின்கீழ் அடிமைப் பட்டதால் ஒன்று பட்டது; ஒரே நாடானது. அதற்கு முன் என்றும் இந்தியா ஒரே நாடாக, ஓராட்சியின் கீழ் இருந்த தில்லை. இதனை ஆங்கிலமொழிதான் செய்தது. ஆங்கில மொழியால்தான் இந்திய மக்களுக்கு, ‘இந்தியா ஒரே நாடு, இந்தியர் எல்லோரும் இந்நாட்டு மக்கள்’ என்ற ஒருமை உணர்ச்சி உண்டானது. இதனை ஆங்கிலம் என்றும் செய்யும் என்பதில் சிறிதும் ஐயுறவில்லை. விடுதலை யுணர்ச்சியை உண்டாக்கினதும் ஆங்கிலந்தான் என்பதை மறத்தல் கூடாது.

அடிமைத்தனத்தில் பிறந்தது - உண்டானது, அயலாரால் உண்டாக்கப்பட்டது என்பதால், இந்திய ஒருமைப் பாட்டை நாம் உதறித்தள்ளிவிடத் துணிவோமா? அஃதேபோல் இந்திய ஒருமைப் பாட்டுக்குக் காரணமான ஆங்கிலத்தை அயல் மொழிப் பட்டம் சூட்டி உதறித் தள்ளிவிடாமல் இருப்பதே இந்நாட்டின் ஒற்றுமைக்கும் உயர்வாழ்வுக்கும் ஏற்றதாகும் என்பதை மறந்து விடக் கூடாது.

இனி, இத்திட்டப்படியே ஆங்கிலத்தை அடியோடகற்றி விட்டு, இந்தியை மட்டும் ஆட்சிமொழியாக்கிக் கொள்வதாக வைத்துக்கொள்வோம். மைய ஆட்சிக்கும், மாநிலத் தொடர்

புக்கும் இந்தி போதும். அதன்பின் நாம் இந்தியாவை விட்டு வெளியில் எங்கும் செல்ல வேண்டியதே இல்லையா? உலக நாடுகளிற் சென்று, அந்நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்வை, கலைத்திறத்தை, தொழிற்றிறத்தைக் கண்டறிந்து வரவேண்

டாமா? வெளியுலகத்தைப் பற்றிக் கவலையில்லாமல், கிணற்றுத் தவளைபோல் இந்நாட்டுக்குள்ளேயே இருந்து வருவதா? வெளி நாட்டுத் தூதர்கட்கு ஆட்கெங்கேபோவது? நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டுத் தூதர்களுடன் நாம் பேசவேண்டாமா?

ஆங்கிலத்தில் கண்டறிந்து வெளியிடும் அறிவியற் செல்வங்களை அறிந்து பயனுறுவ தெங்ஙனம்? அன்றன்று வெளியுலகச் செய்தியை அறிந்துகொள்ள வேண்டாமா? வெளி நாடுகளோடு வாணிகம் செய்து பொருளீட்டுவதெப்படி? ஆங்கிலத்தை அகற்றிவிட்டால் பிரிட்டன், அமெரிக்கா முதலிய வெளிநாடுகள் பணத்தை வாரிவழங்கி முதலீடு செய்து நம் நாட்டைத் தொழில்வள முடையதாக்க முன்வருமா? வெளி நாடுகளிற் சென்று மேற்கல்வி கற்றுவருவ தெங்ஙனம்? ஒன்றுமே தேவையில்லையா? நன்கு எண்ணிப் பாருங்கள்?

உள்ளபடி இவ்வுண்மையை உணர்ந்தவர்களும் வேண்டுமென்றே ஆங்கிலம் கூடாது என்பதுதான் வியப்பினும் வியப்பாக இருக்கிறது.

10. உடனடியாக இந்தியையே ஆட்சிமொழியாக்கி விட வேண்டும்.

இது, இந்தியர் கொள்கை. 4-6க்கு இது மாறானதாகும். இதற்குப் பல இடங்களில் விளக்கந்தரப்படுகிறது.

11. இந்தியை ஆட்சிமொழி ஆக்கக்கூடாது. ஆங்கிலமே இன்றுபோல என்றும் ஆட்சிமொழியாக இருக்கவேண்டும்.

இதுவே இக்கட்டுரையின் முடிவாகும். பாலகோணங்களில் பல இடங்களில் கூறப்படும் விளக்கத்தால் இது உறுதிப் பாடுறும். இந்தி பேசாதாரின் - தமிழரின் முடிந்த முடிவு இதுவே.

12. தேசீய மொழிகள் பதினான்கையும் ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்பது, அவ்வாறு செய்தால், இந்தியும் அவற்றுள் ஒன்றாயடங்கும். அப்போது இந்திக்குத் தனிச்சிறப்பு நீங்கிவிடும் என்பது.

13. மாநில மொழி அல்லாத இந்தி ஒன்றை ஆட்சி மொழியாக உருவாக்க வேண்டும்.

அதாவது, இந்தியின் வகை பதினொன்றனுள் ஏதாவதொன்றன்கண் ஏராளமான அயற் சொற்களைக் கலந்து, அதன் பழைய உருவந்தெரியாதபடி செய்து, அப்பழைய மொழியி னின்றும் முழுதும் வேறுபட்ட ஒரு புதிய மொழியை உண்டாக்கி அதை ஆட்சிமொழி ஆக்கவேண்டும் என்பது. இது தமிழரின் இந்தி எதிர்ப்பை மாற்றுவதற்காகக் கூறும் திட்டமாகும். இந்தி பேசுவோர் மொழி அன்றெனத் தமிழர் உடன்படுவரென்பது கருத்து. உடன்பட்டுச் சட்டஞ் செய்த பின், சிறுகச் சிறுகப் பழைய இந்தியையே ஆக்கிவிடுவது எளிது தானே?

அப் புதிய மொழி எப்படி இந்தி மொழி ஆகும்? ஆணாக மாறிய அங்கயற்கண்ணி எப்படி அங்கயற்கண்ணி ஆவாள்? நூல் வழக்கில்லாத அப்புத்தம் புதிய கதம்ப மொழியை விட, பட்டுப் பழகிய பழைய மொழியான ஆங்கிலத் தைக் கொள்வதில் தவறென்ன? அப்புதிய மொழியும் இந்நாட்டில் வழங்காத மொழி யானதால், இந்நாட்டு மக்களுக்கு அயல் மொழி போன்றதுதானே? தங்கள் மொழியல்லாத அப்புதிய மொழியை ஆட்சிமொழியாக்க இந்தியர் விரும்புவார்களா? இத்தகைய இடர்ப்பாட்டுக்குக் காரணம், எப்படியாவது ஆங்கிலத்தை நீக்கிவிட்டு அந்த இடத்தில் இந்தியை அமர்த்தி விட வேண்டும் என்பதேயாகும்.

14. இந்தி பேசாதார் இந்தியைக் கற்பதுபோல, இந்தி பேசுவோர் தென்னாட்டு மொழிகளில் ஒன்றைக் கற்க வேண்டும்.

தென்னாட்டு மொழிகள் - தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பன. இது ஒருவன் தலையில் மற்றொருவன் தன் பெருஞ் சுமையைச் சுமத்திவிட்டு, இதோ நானும் உன் சுமையைச் சுமக்கிறேன் என்று, அவன் மேல்துண்டை வாங்கித் தன் தலையில் சுற்றிக் கொள்வது போன்றதாகும். இதனால், சுமப்போனின் தலைப்பாரம் தணியாமை போல, இந்தி பேசாதார்க்கு இந்தியின் தீமை அகலுமா என்ன? அவ்வாறு இந்தி பேசுவோர் தங்கள் மொழியைக் கற்பதால் இந்தி பேசாதார்க்கு ஆகும் பயனென்ன? ஆட்சிமொழியும் தாய்மொழியுமாகிய இந்தியைக் கற்கும் இந்தியர், ஆட்சி மொழியல்லாத தென்னாட்டு மொழிகளில் ஒன்றை எதற்காகக் கற்கவேண்டும்?

இனி, இந்தி பேசாத மாநில மொழிகளில் எதை இந்தியர் கற்பது? இந்தி வழங்கும் நான்கு மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்த வரும் ஒவ்வொரு தென்னாட்டு மொழியைக் கற்ப

தெனில், அதனால் உண்டாகும் பயனென்ன? எங்கள் மொழியைத் தான் அங்கு பாடமாக வைக்கவேண்டும் எனத் தமிழர், தெலுங்கர் முதலிய தென்னாட்டவர்க்குள் போட்டியும் பூசலும் பொறாமையும் உண்டாவதற்கேதுவாகுமன்றோ இது?

இப்போதே ஆந்திர முதலமைச்சர், ‘தெலுங்கில் வட சொற்கள் மிகுதியாகக் கலந்திருப்பதால், இந்தி பேசுவோர் தெலுங்கை எளிதில் விரும்பிக் கற்பர்’ என, அடிப்போட்டு வைத்துள்ளார். இதனால், வேறுவகையில் மொழிப் பூசல் உண்டாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இது தமிழரை இந்தியை ஒப்புக்கொள்ளும்படி செய்யும் ஏற்பாடாகும்.

15. இந்தி பேசாதார் மீது இந்தியைத் திணிக்கக் கூடாது; இந்தி பேசுவோர் மீது ஆங்கிலத்தைத் திணிக்கக் கூடாது.

‘இந்தி பேசுவோர் மீது ஆங்கிலத்தைத் திணிக்கக் கூடாது’ என்பதால், இந்தி பேசாதார் தம் தாய் மொழியோடு ஆங்கிலமும் கற்கவேண்டும் என்றாகிறது.

ஓராட்சிக்குட்பட்ட ஒரு நாட்டு மக்களில், ஒருசிலர் இருமொழி கற்கவேண்டும் என்பதும், மற்றொருசிலர் ஒரு மொழி கற்றால் போதும் என்பதும், எவ்வகை மக்களாட்சி முறை என்பது விளங்கவில்லை. இத்தகைய ஆட்சித் திட்டத்தால் நாட்டில் அமைதி எங்ஙனம் நிலவும்? ஒரு கண்ணுக்குச் சுண்ணாம்பு ஒரு கண்ணுக்கு வெண்ணெய்’ என்பது போன்ற முரண்பட்ட முறை யாகவன்றோ உள்ளது இது?

நூற்றைம்பதாண்டுகளுக்கு மேலாக ஆங்கிலத்தைச் சொந்த மொழிபோலப் பயின்று, ஆங்கிலேய ஆட்சியினின்று விடுதலை யடைந்த பதினெட்டாண்டுகளாக ஆங்கிலத்திலேதான் ஆட்சி நடத்திவருகிறோம்; ஆங்கில ஆட்சி முறையையே பின்பற்றி வருகிறோம். இந்தி பேசும் மாநிலங்களிலும் இப் பதினெட்டாண்டு

களாக ஆங்கிலத்திலேதான் ஆட்சி நடத்தப் பட்டு வருகிறது. இந்தி பேசுவோர் இன்றும் ஆங்கிலம் பயின்று தான் வருகின்றனர். இங்ஙனமாக, இந்தி பேசுவோர் மீது எப்படி ஆங்கிலத்தைத் திணிப்பதாகும்? ஆங்கிலத்தை இன்று புதிதாகவா ஆட்சிமொழியாக இந்தி பேசுவோர் மீது திணிக்க முற்படுகிறோம்?

இந்தி பேசாதார் மீது இந்தியைத் திணிக்கக் கூடாது. இந்தி பேசாதார் இந்தி கற்க வேண்டியதில்லை. இந்தி பேசுவோர் மீது ஆங்கிலத்தைத் திணிக்கக் கூடாது - இந்தியர் இந்தி மட்டும் கற்றால் போதும்.

இத்திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரின், இந்தியரும் இந்தி பேசாதாரும் எப்படிப் பழகுவது? எம்மொழியில் இந்தி பேசாத மாநிலங்களும் இந்தி மாநிலங்களும் தொடர்பு வைத்துக் கொள்வது? மைய ஆட்சி எம்மொழியில் நடத்துவது? ஆங்கிலத்தில் எனில், இந்தியர் எவ்வாறு அதில் பங்குகொள்ளமுடியும்? இந்தியில் எனில், இந்தி பேசாத மாநிலத்தார் நிலை என்னாகும்? இந்தி மாநிலங்களும் இந்தி பேசாத மாநிலங்களும் இருகூறாகப் பிரிந்து வாழும் நிலையன்றோ ஏற்படும்? இந்தி, ஆங்கிலம் இரண்டிலும் மைய ஆட்சி நடத்துவதெனில், இந்திய ஆட்சிக்குட்பட்ட அலுவலகங்களில் எவ்வாறு வேலை நடக்கும்? இந்தி பேசாதார்க்கு இந்தி தெரியாது. இந்தி பேசு வோர்க்கு ஆங்கிலம் தெரியாது. பாராளுமன்றக் கூட்டம் எப்படி நடத்துவது? யார் இருமொழி களையும் மொழி பெயர்ப்பது? மைய அமைச்சர்கள் ஒருவர்க் கொருவர் கலந்து பேசிக்கொள்ள வேண்டியதில்லையா? இது முழுதும் முரண்பாடான திட்டமாகும்.

16. பத்தாண்டுக் காலத் தவணை கொடுத்து, அதன் பிறகு இந்தியை மட்டும் ஆட்சிமொழி ஆக்குவது.

17. இந்தி பேசாத மாநில மக்களில் முக்காற் பங்கினர் இந்தி ஆட்சிமொழி ஆகலாம் என்று சொன்னால், அதுமுதல் இந்தியை மட்டும் ஆட்சிமொழி ஆக்குவது.

18. இந்தி பேசாத கடைசி மாநிலம், ஆங்கிலமும் கூடவே இயங்கவேண்டும் என்று சொல்லுகிறவரை ஆங்கிலத்தைத் துணையாட்சி மொழியாகக் கொள்வது.

16, 17, 18இம் மூன்று திட்டங்களும், பாராளு மன்றத்தில் ஆட்சிமொழிச் சட்டத் திருத்தம் செய்வதற்காகத் தீட்டப்பட்ட திட்டங்களாகும்.

16வது -5வது திட்டத்திற்கும், 17வது -6வது திட்டத்திற்கும் வரையறை கூறுவனவாகும்.

5வது திட்டம், இந்தி ஆங்கிலத்தின் நிலையை அடையும் வரையிலும் ஆங்கிலம் இருக்கவேண்டும் என்கின்றது. 16வது, இந்தி ஆங்கிலத்தின் நிலையை அடைந்தாலும் அடையா விட்டாலும் இவ்வளவு காலத்திற்குப்பின் ஆங்கிலத் தை நீக்கிவிட வேண்டும் என்கிறது.

6வது திட்டம், இந்தி பேசாத மாநில மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலம் இருக்கவேண்டும் என்கின்றது. 17வது, அவ்வளவு பேரும் விரும்ப வேண்டியதில்லை. முக்காற் பங்கினர் விரும்பினால் ஆங்கிலத்தை நீக்கிவிடலாம் என்கின்றது.

முக்காற் பங்கினர் என்பது, தமிழர் விரும்பா விட்டாலும் என்பதாகும். தமிழர்தானே இந்தியை நேரடியாக எதிர்ப்பவர்? முக்காற் பங்கினர் என்று சட்டம் செய்துவிட்டால், இந்தி பேசாத மற்றவர்களைச் சரிக்கட்டித் தமிழரைக் கேளாமலே, தமிழர் எதிர்த்தாலும், (எதிர்க்கத்தான் முடியாதே;) ஆங்கிலத்தை விலக்கிவிட்டு, இந்தியை மட்டும் ஆட்சிமொழி ஆக்கிவிடலாம் என்ற கருத்தில் தீட்டப்பட்ட திட்டமாகும் இது. இந்தி பேசாத மற்றவரைச் சரிக்கட்டி விடலாம் என்பதை, 4. ஆட்சிமொழித் திட்டம்; 3. இந்தி பேசாதார் என்பதிற் காண்க.

இவ்விரண்டும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை மட்டும் ஆட்சிமொழி ஆக்கிக் கொள்வதற்காகத் தீட்டப் பட்ட திட்டங் களாகும்.

தமிழ்நாட்டு இந்திய அமைச்சர்களும், தமிழ்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் களும், குறிப்பாகக் காங்கிரசு உறுப்பினர் களும் இதை நன்கு கவனிக்கவேண்டும்.

18. இத்திட்டப்படிதான் திருத்தஞ்செய்யப் போவ தாகக் கேள்வி.

‘கடைசி மாநிலம்’ என்பது - தமிழ்நாடேயாகும். இந்தி ஆட்சிமொழி ஆகக் கூடாதென்று எதிர்ப்பவர் தமிழர்தானே? தமிழர் ஒருநாளும், ‘இந்தி மட்டும் போதும்; ஆங்கிலத்தை நீக்கிவிடலாம்’ என்று சொல்லப்போவதில்லை. தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில், ஆளுங்கட்சியினர் - காங்கிரசுக் கட்சியினர், தங்கள் பெரும் பான்மையைக் கொண்டு அவ்வாறு தீர்மானம் செய்தாலும், தமிழ் மக்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவ்வாறு தீர்மானம் செய்து? ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை மட்டும் ஆட்சிமொழி ஆக்கிவிடலாம் என்ற கருத்தில்தான் இத்திட்டம் தீட்டப்பட்டதாகும். தமிழ் நாட்டுச் சட்டமன்ற எதிர்க்கட்சியினர் அத்தீர்மானத்தை எதிர்ப்பார்களாதலால், பெரும்பான்மைக் கட்சி - ‘மாநிலம்’ என்பதைக் குறிக்குமா என்பது ஆராய்ச்சிக்குரியது.

இவ்வாறு சட்டஞ் செய்தால், கடைசி மாநிலம் அவ்வாறு ஆங்கிலத்தை நீக்கிவிடலாம் என்று சொல்லுகிறவரை, தமிழர் - தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழி படிக்க வேண்டும். இந்தியர்-இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழி படித்தால் போதும்.

ஓராட்சியின் கீழுள்ள ஒரு நாட்டு மக்களுள், சிலர் மூன்று மொழியும், சிலர் இரண்டு மொழியும் படிப்ப தென்பது மக்களாட்சி முறைக்குச் சிறிதும் ஒவ்வாததாகும். ஆளுங்கட்சியின் சனநாயக சோசலிசக் கொள்கைக்கு இது மிகமிக வேறுபட்டதாகும்.

இனிக் கடைசி மாநிலம் - ‘இந்தி மட்டும் போதும்; ஆங்கிலத்தை நீக்கிவிடலாம்’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். அப்போதும், தமிழர்-தமிழ், இந்தி ஆகிய இருமொழியும், இந்தியர்-இந்தி மட்டும் படிப்பதென்பதும் அத்தகைய ஒவ்வா முறையே யாகும்.

இந்தி பேசுவோரும், இந்தி பேசாதோரும் - இந்நாட்டின் ஒரு நிகரான ஒத்த குடிமக்கள், சரிநிகரான பங்காளிகள் ஆவர் என்பதை ஆளுங்கட்சியினர் ஒருபோதும் மறத்தல் கூடாது.

“வாழிகல்வி செல்வமெய்தி மனமகிழ்ந்து கூடியே
மனிதர்யாரும் ஒருநிகர்ச மானமாக வாழ்வமே.”

என்ற பாரதியாரின் வாக்கினை நோக்குக.

2-6-65இல் டில்லியில் கூடிய காங்கிரசுக் காரியக்குழுவின் தீர்மானம்
1.  மும்மொழித் திட்டத்தைப் பள்ளிப்பாடத் திட்டத்தில் சேர்ப்பதோடு, பல்கலைக் கழகக் கட்டத்தை அடையச் செய்தல் எல்லா மாநிலங்களின் கட்டாயமான பொறுப்பாகும்.

2.  அனைத்திந்திய அலுவல் தேர்வுகளை (யு.பி.எஸ்.சி.) ஆங்கிலத்திலும் இந்தியிலும், மற்ற தேசீய மொழிகளிலும் நடத்தவேண்டும்.

3.ஆங்கிலத்திலும் இந்தியிலும் கட்டாயமாக வினாத்தாள்கள் இருக்கும். இந்தியில் தேர்வுகள் எழுதுவோர்க்கு ஏதாவதொரு மாநில மொழியில் ஒரு வினாத்தாள் இருக்கும்.

4.  இந்த நோக்கத்தை அடையும் பொருட்டு:(அ) ஒவ்வொரு மாநில மொழியும் ஆட்சி மொழியாகவும், கூடிய சீக்கிரம் பல்கலைக் கழகப் போதனா மொழியாகவும் ஆகும். (ஆ) பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இந்தி போதனையின் தரம் படிப்படி யாக உயர்த்தப்படும். (இ) முதன்மையான பங்கு வகிக்கக் கூடிய மொழி என்ற முறையில் ஆங்கிலம் தொடர்ந்து கற்றுக் கொடுக்கப் படும்.

5.  இந்திய ஆட்சிமொழியாகவும், மாநிலங்களின் இணைப்பு மொழியாகவும் திறம்பட இயங்கும் வகையில் படிப்படியாகப் பலகட்டத் திட்டமிட்டு இந்தி வளர்ச்சி யடையும்படி செய்யப்படும்.

எப்படியாவது, என்றோ ஒரு நாளைக்கு இந்நாட்டில் தனி இந்தி ஆதிக்கத்தை ஏற்படுத்திவிடவேண்டும் என்ற ஒரே நோக்கத் தோடு செய்யப்பட்டவையாகும் இத்தீர்மானங்கள். மேலும் இத் தீர்மானங்கள், இந்தி எதிர்ப்பை எவ்வாறு தணிக்கலாம் என்பதில் அக்கறை கொள்கின்றனவேயொழிய இந்நாட்டின் எதிர்கால நலனில் அக்கறைகொண்டதாகத் தெரியவில்லை. 4. ஆ, 5. இதற்குச் சான்று பகரும். இவை இந்தி பேசாத இந்நாட்டு மக்களின் உண்மையான எதிர்ப் பையும் நலத்தையும் ஒரு சிறிதும் பொருட்படுத்தாது, தம் போக்கில் செய்யப்பட்டனவாகும் எனலாம். மும்மொழித் திட்டம் பற்றி முன்னரே விளக்கப் பட்டுள்ளது.

2,3 “14 மாநில மொழிகளிலும் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் திட்டத்தால், நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப் பாடும் குலைந்து, மாநில மனப்பான்மையோடு மாநில ஒற்றுமையின்மையும் வளரும். பலமொழிகளில் எழுதினால் ஏற்றத் தாழ்வின்றித் திருத்தமுடியாது.”

-   டாக்டர். சி.பி.ராமசாமி ஐயர்.

4.  இ. தொடர்ந்து கற்றுக் கொடுக்கக்கூடிய தகுதியுடையதும், இன்றியமையாத பங்கு வகிக்கக்கூடியதுமான ஆங்கிலமிருக்க, இந்நாட்டு மக்களில் ஒரு சாராரின் நல்வாழ்வுக்கும், நாட்டொற்றுமைக்கும் ஊறு விளைக்கக்கூடிய இந்தியை எதற்காக வலுக்கட்டாயமாகப் புகுத்த இவ்வளவு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டுமென்பது விளங்கவில்லை. இன்று இந்தித் திணிப்பை எதிர்ப்பதற்குரிய காரணம் என்றும் இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்.

“ஆங்கிலம் நமக்கு அயல்மொழி அல்ல. இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆங்கிலம் மிகவும் இன்றியமையாதது. என்றைக்கு நாம் ஆங்கிலத்தை விடுகிறோமோ அன்றைக்கே நம்முடைய சுதந்தரம் பறிபோய்விடும்”

-   சர்.சி.வி.ராமன்.

ஆட்சிமொழிச் சட்டத்திருத்த விவரம்
இந்திய அரசியல் இந்தியுடன் ஆங்கிலமும் நீடிக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களுக்கும் இந்திய அரசுக்கும் கடிதப் போக்குவரத்து ஆங்கிலத்தில் நடைபெறவேண்டும். இந்தி பேசாத மாநிலங்களுக்கு இந்தி மாநிலங்கள் ஆங்கிலத்தில் கடிதம் எழுத வேண்டும். எல்லா மாநிலங்களும் ஆங்கிலத்தை அகற்றும்படி தீர்மானம் நிறைவேற்றுகிறவரை இது நீடிக்க வேண்டும்.

இவற்றிற்கு முன்னரே விளக்கந்தரப்பட்டுள்ளது.

இந்தியால் விளையுந் தீமை


இந்தி ஆட்சிமொழியானால் - 1. தமிழ் கெடும், 2. தமிழ்ப் பண்பாடு கெடும், 3. தமிழினங் கெடும், 4. தமிழர் வாழ்வு கெடும்.

இந்தி ஆட்சிமொழியானால் - இந்தியர்க்கு மொழி வெறி உண்டாகும்; ஏனையோர்க்கு இந்தி எதிர்ப்புணர்ச்சி உண்டாகும்.

இந்தி ஆட்சிமொழியானால் - இந்தியர் ஆதிக்கம் மிகும்; அல்லாதார் இரண்டாந்தரக் குடிமக்களாவர்.

இந்தி ஆட்சிமொழியானால் - இந்தி பேசுவோர், இந்தி பேசாதோர் என, இந்திய மக்கள் இருவேறு வகை யினராவர்.

இந்தி ஆட்சிமொழியானால் - இந்தியாவின் ஒற்றுமையும், ஒருமைப்பாட்டுணர்ச்சியும் கெடும்.

இந்தி ஆட்சிமொழியானால், தமிழ் கெடும்: கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட அயல்மொழி ஆதிக்கத்தால், தமிழ் இலக்கியத்தில் ஏராளமான அயற் சொற்கள் கலந்து தமிழின் தூய தனித்தன்மையைக் கெடுத்து விட்டன. அயல்மொழிச் சொற்களைக் கலந்து பாடுவதே சிறப்பு என்னும் நிலை ஏற்பட்டது.

“கத்தூரி யகரு ம்ருகமத வித்தார படிர இமசல்
கற்பூர களப மணிவன மணிசேர”

(அருணகிரிநாதர் திருப்புகழ்.)

“சர்வபரி பூரண அகண்டதத் துவமான
சச்சிதா னந்த சிவமே”

-   (தாயுமானவர் பாடல்.)

எனக் காண்க.

தமிழ்ப் பாடல்களாகிய நாலாயிரத்திற்கு, தமிழர்க்கு விளங்காத, தமிழும் வடமொழியும் கலந்த - மணிப்பிர வாள நடையில் உரை எழுதப்பட்டதும், அந்நடையில் சமணர் சீபுராணம் செய்ததும் குறிப்பிடத்தக்கவையாகும்.

" அன்றியும் தமிழ்நூற் களவிலை அவற்றுள்
ஒன்றே யாயினும் தனித்தமிழ் உண்டோ?"

-   (இலக்கணக் கொத்து.)

தமிழ் மக்கள் பெயரெல்லாம் அயல்மொழிப் பெயர் களாயின. தமிழ்ப் பெயர் வைப்பதே தாழ்வு என்ற நிலை உண்டானது. இன்றையத் தமிழ் மக்கள் பெயர்களை நோக்குக. தனித்தமிழ் வளர்த்த மூவரசர் பெயர்களும் - மாறவர்மன் அவநிசூளாமணி, விஜயாலயன், ரவிவர்மன் குலசேகரன் என, அயற்பெயர்களாயின.

அரியணை ஏறாத வெறும் அயல்மொழி ஆதிக்கத்தினாலேயே தமிழ் இவ்வாறு கெட்டுவிட்டதென்றால், வடமொழியின் சார்புடைய இந்தி ஆட்சிமொழியானால், தமிழ் கெடும் எனத் தமிழர் அஞ்சுவதில் தவறுண்டோ?

இப்போதுதான் தமிழர்க்குத் தனித்தமிழ் உணர்ச்சி தோன்றி, அயற்சொற் கலவாது பாடியும் எழுதியும் வருகின்றனர். இந்தி ஆட்சிமொழியானால், அவ்வுணர்ச்சி கெட்டுப் பழைய நிலையே உண்டாகிவிடும் என்றஞ்சியே தமிழர் இந்தியை எதிர்க்கின்றனர்.

150 ஆண்டுகள் ஆங்கிலம் ஆட்சிமொழியாகவும், பாட மொழியாகவும் இருந்தும், ஆங்கிலச் சொற்கள் தமிழ் இலக்கியத்தில் கலவாமையும், தமிழர் ஆங்கிலப் பெயர்வைத்துக் கொள்ளாமையும் இங்கு குறிப்பிடத்தக்கனவாகும்.

‘இந்தியால் தமிழ் அழியாது’ என்கின்றனர். இந்தியால் தமிழ் அழிந்துவிடுமென்று தமிழர் எண்ணவும் இல்லை, அஞ்சவும் இல்லை. இந்தியால் தமிழ் கெடும் என்றுதான் அஞ்சுகின்றனர். அழிவதைவிடக் கெடுவதுதானே கொடிது. இறந்துவிடுவதை விடத் தீராத நடைநோயால் உடல் நலிந்து படுத்த படுக்கையில் கிடப்பதுதானே ஒருவர்க்குப் பெருந் துன்பம்? இலக்கிய வள மில்லாத இந்தியால் தமிழ் வளரு மென்பதும் பொருந்தாக் கூற்றேயாகும்.

1.  2.  இந்தி ஆட்சிமொழியானால், தமிழ்ப் பண்பாடு கெடும். அகவாழ்வையும் புறவாழ்வையும் சிறப்பித்துப்பாடி அதன்படி வாழ்ந்துவந்த உயர்வாழ்வும், குறள் நெறியும், பொது நலத்துறவும் வாழ்க்கையின் ஒரு கூறான சமயவாழ்வும் ஆகிய இயற்கையோடொட்டிய பழந்தமிழ்ப் பண்பாடுகள் ஒழிந்து, புராணங்களும் புகழ் நூல்களும் மலிந்தமைக்கு அயல்மொழி ஆதிக்க மன்றோ காரணம்? இந்தி ஆட்சி மொழியானால், இந்தியரின் பெருங்கலப் பேற்பட்டு மேலும் தமிழ்ப் பண்பாடு கெடும் என்பதில் தடையுண்டோ?

2.  3.  இந்தி ஆட்சிமொழியானால், தமிழினங்கெடும்: ஒன்றாயொரு குலமாய் உயர்குடி மக்களாய் வாழ்ந்து வந்த தமிழினம், அயல்மொழி யாதிக்கத்தால், பிறப்பிலேயே உயர்வு தாழ்வுடைய வென்னும் பாகுபாடுற்று, கொள்வனை கொடுப்பனை யற்று, உடனுண்ணுதலற்று, வெவ்வேறு சாதிகளாகப் பிரிந்து வாழுநிலை ஏற்பட்டது. சில பழங்குடி வகுப்பினர் தீண்டப்படாத நிலையை அடைந்தனர். ஒவ்வொரு தமிழ்ச் சாதிக்கும் வடமொழி மூலச் சாதிப் புராணங்கள் ஏற்படலாயின. ஒவ்வொரு சாதியினரும் தம் சாதிப் புராணக் கற்பனையைப் பெருமையாக மதித்துத் தத்தம் சாதியுயர்வை நிலைநாட்ட முனைவதால், தமிழரிடைச் சாதிப்பூசல் மலிந்துவிட்டது.

இப்போதுதான் தமிழர்க்கு, தமிழினம் தனியினம், தமிழ்ச் சாதிகள் பிறப்பினால் வேறுபட்டவை அல்ல என்ற உண்மை புலப்பட்டு வருகிறது. இந்தி அதைக் கெடுத்துவிடும் என்பதில் ஐயமுண்டோ?

1.  4.  இந்தி ஆட்சிமொழியானால், தமிழர் வாழ்வு கெடும்; இந்தி ஆட்சி மொழியானால், தமிழ் நாட்டிலுள்ள இந்திய அலுவல்களிலும், தமிழ்நாட்டு ஆட்சி அலுவல் களிலும் இந்தியர் பெருவாரியாக நுழைந்து விடுவர். தமிழ் நாட்டில் ஏராளமான இந்தியர் குடியேறி, தமிழர் தொழில், வாணிகம் எல்லா வற்றையும் கைப்பற்றிவிடுவர். அதனால் தமிழர் வாழ்வு கெடும். தமிழர் இந்தியரோடு நெருங்கி வாழ நேருமாகையால், தமிழ் கெடுவ தோடு தமிழ்ப் பண்பாடும் கெடும்.

இக்காரணங்களால் தான் இந்தி ஆட்சிமொழி ஆவதைத் தமிழர் எதிர்க்கின்றனர். தங்கள் மொழியும் பண்பாடும் இனமும் வாழ்வும் கெட யார்தான் உடன்படுவர்?

2.  இந்தி ஆட்சிமொழி என உறுதிப்படு முன்னரே, 26-1-65க்கு முன்னரே, இந்தியில்தான் பேசவேண்டும், இந்தியில் தான் அறிக்கைகள் இருக்கவேண்டும் என இந்தியர் கூச்சலிடு கின்றனர்; பலமொழி பேசுவோர், இந்தி தெரியாதோர் கூடியுள்ள பாராளுமன்றத்தில் இந்தியில் கேள்வி கேட்கின்றனர், இந்தியில் பேசுகின்றனர்; இந்தியக் குடியரசுத் தலைவரையே ஆங்கிலத்தில் பேசக்கூடாதெனக் கூப்பாடு போடுகின்றனர்; இந்தியை உடனடி யாக ஆட்சிமொழி யாக்காவிட்டால், தாக்குப்பிடிக்க முடியாத பெரும்புரட்சி நடத்துவோம் - என்று விரட்டுகின்றனர்.

இந்தி ஆட்சிமொழியானால், அன்னாருக்கு மொழி வெறி தலைக்கேறி விடுமென்பதற் கையமுண்டோ? இந்தி பேசாதவர் களை, தமிழர்களை இந்நாட்டுக் குடிமக்கள் என்று மதிப்பார்களா என்ன? இந்தியரின் அம்மொழிவெறி, இந்தி பேசாதார்க்கு இந்தி எதிர்ப்புணர்ச்சியை உண்டாக்காமலா இருக்கும்? அது இந்நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு உகந்ததாகுமா?

3.  இந்தி ஆட்சிமொழியானால், இந்தியர் ஆதிக்கம் மிகும்; அல்லாதார் இரண்டாந்தரக் குடிமக்களாவார்: இன்றே, மற்ற மொழியினரைவிட நாங்கள் பெரும்பாலோர்; நாங்கள் வைத்தது தான் சட்டம் என்கின்றனர்; இந்திய ஆட்சி அலுவலகங்களில் அவர்கள் ஆதிக்கம் மிக்குள்ளது. மற்றவர்களை அவர்கள் மதிப்பதில்லை. இந்தி ஆட்சிமொழியானால், ஆங்கில ஆட்சிக் காலத்தே ஆங்கிலேயரும் நாமும் எந்நிலையில் இருந்துவந்தோ மோ, எவ்வாறு அவர்கள் நம்மை மதித்து நடத்திவந்தனரோ அந்நிலையினும் மோசமான நிலை ஏற்பட்டுவிடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஓர் அலுவலக ஏவல் இந்தியன் கூடத் தமிழ் உயர்தர அதிகாரியை மதிக்காத நிலை ஏற்பட்டுவிடும். இந்தி பேசாதார், தமிழர், இந்தியாட்சியில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழநேரும் என்பதில் ஐயப்பாடே இல்லை.

4.  இந்தி ஆட்சி மொழி ஆனால், இந்தி பேசுவோர், இந்தி பேசாதார் என, இந்திய மக்கள் இருவேறு வகையினராவர்; விடுதலை இயக்க காலத்தே காந்தியடிகளால் உண்டாக்கப்பட்ட, ‘நாம் இந்தியர், நமது நாடு இந்திய நாடு’ என்ற உணர்ச்சி, சென்ற சீனத்தாக்குதலினால் உறுதிப் பாடுற்றது. இந்தியாவிலிருந்து பிரிந்துவிடவேண்டும் என்று எண்ணியவர்கள்கூட அவ்வெண்ணத் தைவிட்டு, ‘எங்கள் இந்திய மண்ணை மிதிக்க அச்சீனரை விடோம்’ என்று வீரமுழக்கம் செய்தனர். இன்று பாகித்தான் கொடுக்கும் தொல்லையால் அவ்வுணர்ச்சி மேலும் வலுப் பெற்றுள்ளது. இந்தி ஆட்சிமொழியானால், இந்தியரின் ஆதிக்க வெறியால், அடாச் செயல்களால், இந்தி பேசாதார்க்கு, தமிழர்க்கு, அவ்வொற்றுமை மனப்பான்மை கெட்டு, இந்தியர் வேறு நாம் வேறு; இவ்விந்தியரோடு கூடிவாழ நம்மால் முடியாது; ஆங்கில ஆட்சிக்கு முன்னிருந்ததுபோல் நாம்பிரிந்து தனியாக வாழ்வதே நல்லது என்ற எண்ணம் உண்டாவது இயல்பே. வடஇந்தியரின் முரட்டுப் பிடிவாதத்தால்தானே பாகித்தான் பிரிய நேர்ந்தது? எண்ணிப்பாருங்கள்.

5.  இந்தி ஆட்சிமொழியானால், இந்தியரின் மொழிவெறியும், ஆதிக்கச் செருக்கும் மிகுமாதலால், மற்றவர்க்கு வேற்றுமை யுணர்ச்சி உண்டாகும். அதனால், இந்தியாவின் ஒற்றுமையும் ஒருமைப்பாட்டுணர்ச்சியும் கெடும் என்பது உறுதி. ஒற்றுமையினையும் ஒருமைப்பாட்டுணர்ச்சியினையும் சட்டத்தி னாலோ, அதிகாரத்தினாலோ, அடக்குமுறையினாலோ உண்டாக்கி விட முடியா? அவை தன்னுணர்ச்சியினால் தானாக உண்டாகக் கூடியவை. அவ்வுணர்ச்சியை இந்தியினால் கெடுத்துக் கொள்வதா? ஒரு மொழிக்காக கருத்துப் பரிமாறும் ஒரு கருவிக்காக, சொந்த மொழி அயல்மொழி என்பதற்காக இழக்க வழி செய்வதா? எண்ணிப் பாருங்கள்.

இவ்வளவு தீமையினையும் பொருட்படுத்தாது, ‘இந்தியை ஆட்சி மொழி ஆக்கித்தான் தீருவோம்’ எனின், அது இந்நாட்டின். இந்நாட்டு மக்களின் போதாக்காலம் என்று தான் நினைக்க வேண்டும்.

ஆட்சிமொழிச் சட்டத் திருத்தம்


இந்தி மட்டும் ஆட்சி மொழியாக இருக்கவேண்டும்; ஆங்கிலம் கூடாது என்பது ஒரு கட்சி. இந்தி கூடாது; ஆங்கிலமே ஆட்சிமொழியாக இருந்து வரவேண்டும் என்பது மற்றொரு கட்சி. எனவே, ஆட்சி மொழித் திட்டம் பற்றி இருவேறு வகையான கருத்து நிலவி வருகிறது.

ஆட்சிமொழித் திட்டம் இந்தியப் பாராளுமன்றத்தில், பெரும்பான்மையினரால் சட்டஞ் செய்யப்பட வேண்டியது. இந்தியப் பாராளுமன்றத்தில் காங்கிரசுக் கட்சியினரே பெரும்பான்மையினராவர். மற்ற கட்சியின ரெல்லாம் சேர்ந்து சிறுபான்மையினரே.

எனவே, இந்நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப் பாட்டுக்கும் ஊறுண்டாகாத வகையில், இந்தி பேசாதார்க்கு, குறிப்பாகத் தமிழர்க்குத் தீங்கு நேராதவகையில் ஆட்சி மொழிச் சட்டத் திருத்தம் செய்யும் பொறுப்பு, காங்கிரசுக் கட்சி யினரைச் சார்ந்ததே.

ஆளுங்கட்சியாகிய காங்கிரசுக் கட்சியினர் - இந்தி பேசு வோர், இந்தி பேசாதோர் என இருவகையினராவர். இந்தி ஆட்சிமொழி ஆகவேண்டும் என்பது காங்கிரசுக் கொள்கை யாகையால், இந்தி பேசுவோர் - இந்தி மட்டும் ஆட்சிமொழி ஆகவேண்டும்; ஆங்கிலம் கூடாது என்றால், அது குற்றமாகக் கருதப்படமாட்டாது. இந்தி பேசாதார் - இந்தி கூடாது; ஆங்கிலமே ஆட்சிமொழியாக இருந்துவரட்டும் என்றால், அது கட்சிக் கொள்கைக்கு மாறானதாகையால் குற்றமாகக் கருதப் படும். அதனால், இந்தி பேசாதார் அவ்வாறு கூறத் துணிவதில்லை. எனவே, இந்தியப் பாராளுமன்றத்தில் இந்திக்கே பேராதரவு உண்டு; ஆங்கிலத்திற்கு ஆதரவில்லை.

ஆட்சிமொழி என்பது ஒரு கட்சிச் சார்புடையதன்று அது கட்சிக்கு அப்பாற்பட்டது. ஆளுங்கட்சியுட்பட இந்தியா விலுள்ள எல்லாக் கட்சியினரும், எக்கட்சிச்சார்பும் இல்லாதவரும் ஆகிய இந்திய மக்கள் 40 கோடி பேருக்கும் பொதுவானது ஆட்சி மொழி என்பது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சிமொழி மாறுவதில்லை. இந்நாட்டு மக்கள் ஒவ்வொரு வரின் உடமை யாகும் அது.

ஆகவே, சொந்தமொழி - அயல்மொழி என்பது கருதி, இந்நாட்டு மக்களில் ஒருசாரார் விருப்பத்திற்கு மாறாக, இந்தி பேசாதார்க்குத் தீமைதரும் என்பதை எண்ணிப்பாராது, ஆளுங் கட்சியின் பெரும்பான்மைத் திறத்தால் ஆட்சிமொழிச் சட்டத் திருத்தம் செய்யக்கூடாது. அது ஆட்சிமொழியின் தன்மைக்கு ஒத்ததாகாது.

காங்கிரசுப் பாராளுமன்ற உறுப்பினர்களும், இந்திய அமைச்சர்களும், குறிப்பாகத் தலைமை அமைச்சர் அவர்களும் - இந்நாட்டு மக்களின் ஒரு நிகரான உயர் வாழ்வையும், இந்தி பேசாத மக்களின், குறிப்பாகத் தமிழ் மக்களின் நல்வாழ் வையும் நன்கு எண்ணிப்பார்த்து, சமன் செய்து சீர்தூக்குங்கோல் போல் நடுநின்று நன்கு ஆய்ந்து, ஆட்சி மொழிச் சிக்கல் என்பது இனி என்றென்றைக்கும் தலை காட்டாதவாறு, கீழ்வருமாறு ஆட்சிமொழிச் சட்டத்தைத் திருத்திவிட வேண்டும்.

இதற்கு, இந்தி பேசாத மாநிலங்களின் காங்கிரசுப் பாராளு மன்ற உறுப் பினர்களின், அதிலும், தமிழ்நாட்டுக் காங்கிரசுப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பு தனிச் சிறப்பு வாய்ந்த தாகும்.

இந்தி பேசும் மாநிலங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் - ‘தனக்குள்ளது பிறர்க்கும் உண்டு’ என்னும் உண்மையை உணர்ந்து, இந்நாட்டுக்காகத் தங்கள் மொழிக் கொள்கையை விட்டுக்கொடுத்து, இதற்குப் பெருந்துணை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் இதற்கு முதற்காரணமாக அமையவேண்டும். காங்கிரசுத் தலைவரின் பொறுப்பு மலையினும் மாணப் பெரிதாகும். இதில் கட்சிக் கொள்கைக்கு இடமே இருக்கக்கூடாது. வெறுப்பு விருப்பின்றி, எதிர்ப்பென்னும் பெயரின்றி ஒருமனமாக இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

இந்நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஏற்ப நல்ல தீர்ப்பு வழங்குவது, இந்தியக் குடியரசுத் தலைவரின் பொறுப்பும் கடமையுமாகும்.

‘அந்தந்த மாநிலமொழி, அந்தந்த மாநிலங்களின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும், ஆங்கிலம் இந்திய ஆட்சி மொழியாகவும், மாநிலத் தொடர்பு மொழியாகவும் இருந்து வரவேண்டும்’ - என்பதே.

தமிழ் - தமிழ்நாட்டு ஆட்சிமொழியாகும். இவ்வாறே ஏனை இந்தி பேசாத மாநிலமொழிகளும். இந்தி - இந்தி பேசும் மாநிலங்களின் ஆட்சிமொழியாகும்.

தமிழர் - தமிழோடு ஆங்கிலமும் கற்றுவரவேண்டும். இவ்வாறே மற்ற இந்தி பேசாத மாநிலத்தவரும் தத்தம் தாய்மொழியோடு ஆங்கிலமும் கற்றுவரவேண்டும்.

அதாவது, இந்தி பேசுவோரும் இந்தி பேசாதோரும் தத்தம் தாய்மொழியோடு ஆங்கிலம் மட்டும் கற்றால் போதும். இத்திட்டத்தால், இந்தியும், இந்தியல்லாத ஏனை மாநில மொழி களும் ஒரே நிகராக ஆட்சிமொழியாகின்றன. இம்மொழியினர் ஒருமனப்பட்டுறவாடி ஒரு நிகராய் வாழ்ந்துவருவர்.

இவ் விருமொழித் திட்டம் - இந்நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் முழுக்க முழுக்க ஏற்றதாகும். இதுவே, சனநாயக சோசலிசத்திற்கு ஏற்ற திட்டமாகும். இத்திட்டத்தை நிறைவேற்றி, இந்நாட்டு மக்களெல்லோரும் ஒன்றாய் ஒருநிகராய் ஒருமனப்பட்டு உயர்வாழ்வு வாழ்வோமாக.